செவ்வாய், 29 நவம்பர், 2016

புருடா மன்னர்கள் சங்கம் வழக்கம் போலப் பல புளுகுகளை அள்ளி விட்டிருக்கிறது.



தத்தோபத் தெங்கடிஜியின் நினைவுநாள் மலரஞ்சலி என்று துண்டறிக்கை வெளியிட்ட புருடா மன்னர்கள் சங்கம் வழக்கம் போலப் பல புளுகுகளை அள்ளி விட்டிருக்கிறது.

புளுகு நம்பர் 1:

 1952 பொதுத் தேர்தலில் குருஜி கோல்வால்கரின் ஆலோசனையுடன் தெங்கடிஜி அம்பேத்கருக்குத் தேர்தல் பணி செய்தது. என்பதாகும். ஆனால் உண்மை என்ன தெரியுமா?

இதோ தனஞ்செய்கீர் எழுதிய அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு (மொழிபெயர்ப்பு க.முகிலன்) பக்கம் 652 இவ்வாறு கூறுகிறது: ~

"தீண்டப்படாத சாதிகள் பேரவையானது தேர்தலில் காங்கிரசுää இந்து மகாசபை, கம்யூனிஸ்டு கட்சி ஆகிய எவற்றுடனும் உடன்பாடு வைத்துக்கொள்ளாது "என்று அறிவித்தது|

இந்துமகாசபை என்றால் யார் என்று இந்தக்கால இளசுகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைய பிஜேபியின் அன்றைய பெயர். அது ஆர்எஸ்எஸால் வழி நடத்தப்பட்டது. இந்துமகாசபா என்ற பெயர் பின்னாளில் ஜனசங்கமாக மாறியது.

அந்த ஜனசங்கம்தான் இன்று பிஜேபி யாக உருவெடுத்துள்ளது.
ஆக பந்தியிலேயே உட்கார அம்பேத்கர் இவர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. அப்படியிருக்க தெங்கடிஜி பந்தியில் உட்கார்ந்து இலைகளின் ஓட்டையை எண்ணிக் கொண்டிருந்தார் என்கிறது பிஎம்எஸ்.

புளுகு நம்பர் 2 :

காங்கிரஸ் கட்சி தேர்தலில் பல முறைகேடுகளைச் செய்து அம்பேத்கரைத் தோற்கடித்தது. தெங்கடிஜி ஆதாரங்களைத் திரட்டி தேர்தல் ஆணைத்திற்குப் புகார் அளித்தார். தேர்தல் அதிகாரி தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என்று அறிவித்தார்.
இதன் நிலை என்ன தெரியுமா?

அதே நூல் பக்கம் 662 இவ்வாறு கூறுகிறது:

அம்பேத்கரும் அவருடன் இரட்டை உறுப்பினர் தொகுதியில் அவருடன் இணைந்து போட்டியிட்ட சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அசோக் மேத்தாவும் முறைகேடு குறித்து வழக்குத் தொடுத்தனர். அவ்வழக்கில் அம்பேத்கரே வாதிட்டார். ஆயினும் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

வழக்கே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தேர்தல் அதிகாரி தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என்று அறிவித்தார் என்று புளுகுகிறது பிஎம்எஸ். அடுத்து 1954ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் யாருடனும் கூட்டு சேராமல் சுயேச்சை வேட்பாளருடன் இணைந்து போட்டியிடத்தான் விரும்பினாரே தவிர இந்துமகாசபா என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படியிருக்க புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறது பிஎம்எஸ்.

இந்த பிஎம்எஸ் காரர்கள் வியந்து போற்றும் தெங்கடிஜி பாலகங்காதர திலகரின் தீவிர ஆதரவாளர். அதனால்தான் குருஜி கோல்வால்கரின் ஆலோசனையின் பேரில் திலகருடைய பிறந்தநாளான ஜூலை 23 அன்று பிஎம்எஸ்  துவக்கப்பட்டதாக இவர்கள் பெருமை பொங்கக் கூறுவார்கள். அந்தத் திலகர் அம்பேத்கருக்குச் செய்தது என்ன தெரியுமா?

1920ல் அண்ணல் அம்பேத்கர் ~மூக் நாயக்| என்ற பத்திரிகையைத் துவக்குகிறார். அந்தப் பத்திரிகை வெளிவருவதுபற்றி காசுகொடுத்து விளம்பரம் கொடுத்தபொழுது திலகர் நடத்திய ~கேசரி| என்ற பத்திரிகை அதனை வெளியிட மறுத்து விட்டது. ஒரு தீண்டத்தகாதவன் நடத்துகின்ற பத்திரிகைக்கு விளம்பரம் வெளியிடுவதே தீட்டு என்று கருதியது அந்த கேசரி.              (ஆதாரம் : அதே நூல் பக்கம் : 55)

புளுகு நம்பர் 3 :

தீண்டாமைக்கு சாஸ்திரத்தில் இடமில்லை என்று அம்பேத்கர் அறிவிக்கச் சொன்னதாகவும் துறவிகள், இந்து சன்னியாசிகள் ~சமுதாயத்தில் நிலவி வரும் தீண்டாமைக் கொடுமைக்கு சாஸ்திர அங்கீகாரம் கிடையாது| என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டதாகவும் பிஎம்எஸ் புருடா விட்டிருக்கிறது.

 இதனை ஒருபோதும் அம்பேத்கர் ஏற்றுக் கொண்டதில்லை. அதனை ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால்தான் ~இந்துவாகப் பிறந்த நான் ஒருபோதும் இந்துவாகச் சாக மாட்டேன் என்று அறிவித்து இலட்சக் கணக்கான மக்களுடன் புத்த மார்க்கத்தில் இணைந்தார்.
அத்துடன் எந்தெந்த சாஸ்திரங்களில் தீண்டாமைக்கு ஆதாரம் இருக்கிறது என்பதனை தௌ;ளத் தெளிவாக அம்பேத்கர் அவர்கள் படம் பிடித்துக் காட்டியுள்ளார்கள்.

அவற்றை நாங்கள் தொகுத்துக் கொண்டுள்ளோம். விரைவில் அது புத்தகமாக வெளிவர உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அண்ணல் அவர்கள் உயிருடன் இருந்தபொழுது அவருக்குப் பல வழிகளிலும் தொல்லை கொடுத்த கூட்டம் இப்பொழுது மக்களை ஏமாற்ற பொய் மூட்டைகளை அள்ளி விடுகிறது. ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்ட கூட்டம் தொடர்ந்து ஏமாற்றுவதையே தனது கொள்கையாகக் கொண்டுள்ளது. அதனுடைய பசப்பு வார்த்தைக்கு மயங்கி அவர்கள் விரிக்கும் வலையில் விழுந்திட வேண்டாம் என தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட சமுதாய இளைஞர்களைக் கேட்டுக்கொள்கிறோம். மேலும் அவர்களின் முகமூடியைத் தொடர்ந்து கிழிப்போம்!

20-11-2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக