ஞாயிறு, 13 நவம்பர், 2016

திலகரும்வல்லபாய் பட்டேலும் சியாம் பிரசாத் முகர்ஜியும்உனக்கு ஆதர்ஷ புருஷர், அம்பேத்கரும் ஆதர்ஷ புருஷரா?




1917ல் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் இயற்றினார்கள். அதனை அண்ணல் அம்பேத்கர் ஒரு விநோத நிகழ்ச்சி என்று ~காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாத மக்களுக்குச் செய்தது என்ன?| என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார். தீண்டாமை ஒழிப்பையே தனது லட்சியமாகக் கொண்ட அம்பேத்கர் தீண்டாமையை ஒழிக்கக் கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்காமல் விநோதமான நிகழ்ச்சி என்று ஏன் குறிப்பிடுகிறார்?

1885ல் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டு முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த முப்பத்திரண்டு ஆண்டுகளாக இத்தீர்மானம் கொண்டு வரப்படாமல் இருந்ததற்குக் காரணம் பாலகங்காதர திலகர்தான். அவர் தீண்டாமையை ஒரு கொடுமையாகவே பார்க்கவில்லை. காங்கிரஸ் மாநாட்டுப் பந்தலுக்குள் கூட தீண்டத்தகாதவர்களை அனுமதிக்கக் கூடாது என்று சொன்னவர். அதனால்தான் அத்தீர்மானம் கொண்டுவர இவ்வளவுகாலம் ஆனது என்கிறார் அம்பேத்கர்.

 கீழ்ஜாதி மக்களெல்லாம் உயர் படிப்புப் படிக்கக் கூடாது என்று சொன்னவர். சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் அவர்கள் ஏன் செல்ல வேண்டும் என்று கேட்டவர் திலகர். அண்ணல் அம்பேத்கர் ~மூக் நாயக்| என்ற பத்திரிகை துவங்கியபோது அதற்கு காசுகொடுத்து விளம்பரம் போட திலகரது பத்திரிகையான கேசரி  மறுத்துவிட்டது. சுதந்திரமடைந்த இந்தியாவில் மனுதர்மம்தான் சட்டமாக ஆக்கப்படும் என்றவர் திலகர்.
அந்த மனுதர்மத்தைத் தீவைத்துப் பொசுக்கியவர் அம்பேத்கர்

அந்தத் திலகரும் உனக்கு ஆதர்ஷ புருஷர் அம்பேத்கரும் ஆதர்ஷ புருஷரா?

1942ல் இரண்டாம் உலகப் போர் நடந்தபோது அனைத்து இந்தியர்களின் ஒத்துழைப்பையும்  பெற வேண்டும் என்பதற்காக அன்றைய வைஷ்ராய் லின்லித்தோ பிரபு அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த 52 முக்கிய பிரமுகர்களை அழைத்தார். இதில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலைவர்களும் அழைக்கப்பட்டார்கள். இப்படிக் கடையர் கூட்டத்தை வைசியராய் அழைத்து விட்டார் என்பதையே வல்லபாய் பட்டேல் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இது நடந்து முடிந்து சிறிது காலத்திற்குள் ஆமதாபாத்தில் உரையாற்றிய வல்லபாய் பட்டேல் சொன்னார். ~வைசிராய் இந்து மகாசபைத் தலைவர்களைக் கூப்பிட்டனுப்பினார். முஸ்லிம் லீக் தலைவர்களையும் கூப்பிட்டனுப்பினார். காஞ்சிகளையும்(எண்ணெய்க்காரர்கள்) மோர்ச்சிகளையும் (சக்கிலியர்களையும்) மற்றவர்களையும் கூப்பிட்டனுப்பினார்|
வல்லபாய் பட்டேல் குசும்பாகவும் குத்தலாகவும் காஞ்சிகளையும் மோர்ச்சிகளையும் குறிப்பிட்டார் என்றாலும் ஆளும் வகுப்பினர் இந்நாட்டின் அடிமை வகுப்பை பொதுவாகவே இகழ்ந்து வெறுப்பதையே அவரது பேச்சு காட்டுகிறது என்று அம்பேத்கர் எழுதுகிறார்.

அந்த வல்லபாய் பட்டேலும் உனக்கு ஆதர்ஷ புருஷர், அம்பேத்கரும் ஆதர்ஷ புருஷரா?

அண்ணல் அம்பேத்கர் இந்து சட்ட திருத்த மசோதா கொண்டு வந்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர் சியாம் பிரசாத் முகர்ஜி. அவர்தான் ஜனசங்கத்தைத் துவக்கியவர். அந்த ஜனசங்கம்தான் இன்றைய பிஜேபி. அதனால்தான் அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியைத் தூக்கியெறிந்தார்.

அந்த சியாம் பிரசாத் முகர்ஜியும் உனக்கு ஆதர்ஷ புருஷர்? அம்பேத்கரும் ஆதர்ஷ புருஷரா?

இராமன் ஒரு குடிகாரன் என்பதை வால்மீகி இராமாயணத்தின்மூலம் நிரூபித்தவர் அம்பேத்கர். கீதை பைத்தியக்காரனின் உளறல் என்றவர் அம்பேத்கர். அந்த இராமனுக்குக் கோயில் கட்டத் துடிக்கும் நீங்கள்ää கீதையை தேசிய நூலாக அறிவிக்கத் துடிக்கும் நீங்கள் அம்பேத்கரை ஆதர்ஷ புருஷர் என்று சொல்வது ஏமாற்றுவேலை.

அந்த இராமனும் கிருஷ்ணனும் அவதார புருஷர்கள். அம்பேத்கர் ஆதர்ஷ புருஷரா?

பிள்ளைப் பிராயம் துவங்கி தனது வாழ்வின் உச்சம் வரை கசப்பான அனுபவத்தைத் தந்தது இந்து மதம் அல்லவா? அதனால்தானே இந்து மதத்தைத் தூக்கியெறிந்து பவுத்தத்தைத் தழுவினார்?
மகத் குளத்தை புதுப்பித்து அழகூட்டி அலங்கரித்திருக்கிறோம் என்கிறாயே! அவர் தண்ணீர் குடித்ததால் தீட்டானது என்று தீட்டுப் போக்கியவர்களை என்ன செய்தாய்? இன்னமும் அப்படித் தீட்டுப்போக்கிய மாட்டு மூத்திரத்தைப் புனிதம் என்கிறாய்.
உங்களுக்காகத்தான் அம்பேத்கர் அப்பொழுதே சொன்னார். இவர்கள் வாயில் ராமனை உச்சரிப்பார்கள். ஆனால் கக்கத்தில் கத்தியை வைத்திருப்பார்கள். அவர்களை நம்பாதீர்! என்று சொன்னார்.

அதனை ஏற்றுக் கொண்ட லட்சோபலட்சம் தாழ்த்தப்பட்ட மக்கள் அம்பேத்கர் வழியில் உன்னை விரட்டி அடிப்பார்கள். சில கருங்காலிகள் நீ தூக்கியெறியும் எலும்புத் துண்டுகளுக்காக உன் பின்னால் அலையலாம்.  எல்லோரையும் அப்படி எண்ணி விடாதே! ஏமாந்துபோவாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக