திங்கள், 14 நவம்பர், 2016

கடந்த காலத்தைப் பற்றிய பெருமித உணர்வும் நிகழ் காலத்தைப் பற்றிய கவலையும் எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளும்



ஆர்எஸ்எஸ் பிஜேபி ஆகியவற்றுக்கும் பிஎம்எஸ் க்கும் தொடர்பே இல்லை என்று இராமர் மேலும் சீதை மேலும் அடித்துச் சத்தியம் செய்வார்கள் சங் பரிவாரங்கள்.
ஆனால் அவர்கள் இளைஞர்களுக்கு எழுச்சியூட்ட ஒரு வாசகத்தைச் சொல்லுவார்கள். அதாவது “எந்த ஒரு சமுதாயத்தில் கடந்த காலத்தைப் பற்றிய பெருமித உணர்வும் நிகழ் காலத்தைப் பற்றிய கவலையும் எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளும் கொண்ட இளைஞர்கள் இருக்கிறார்களோ அந்த சமுதாயம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்” என்று அரவிந்தர் விவேகானந்தர் போன்றோர் சொன்னதாகக் கூறுவார்கள்.

இதனைக் கேட்பதற்கு மிகவும் உணர்ச்சியூட்டுவதாக இருக்கும். ஆனால் இதில் பொதிந்துள்ள பொருள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் ஆபத்தானது.

கடந்த காலத்தைப் பற்றிய பெருமிதம் யாருக்கு இருக்கும்? ஒரு பிராமண இளைஞன் தன்னுடைய தந்தை ஒரு பெரிய பொதுத்துறை நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்தார். தாத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். அவருடைய அப்பா மத்திய அரசின் அமைச்சரவைச் செயலாளராக இருந்தார். அவருடைய அப்பா ஒரு சமஸ்தானத்தில் திவானாக இருந்தார். அவருடைய அப்பா ஒரு மன்னரிடம் மந்திரியாக இருந்தார் என்ற சமுதாய சூழ்நிலையில் வளர்ந்த பார்ப்பன இளைஞனுக்கு கடந்த காலத்தைப் பற்றிய பெருமித உணர்வு இருக்கும்.

அதே நேரத்தில் எவ்வளவு பெரிய பணக்காரனாக ஜமீன்தாராக இருந்தாலும் பிச்சையெடுத்து சாப்பிடும் பார்ப்பானைப் பார்த்து சாமி என்று கும்பிடுகிறார். உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு வயதான முதியவரை ஆறு வயதுப் பார்ப்பனச் சிறுவன் என்னடா கருப்பா என்று கூப்பிடுகிறான். காலம் காலமாக அடிமையாக தோட்டியாக செருப்புத் தைப்பவராக முடி திருத்துபவராக சலவைத் தொழிலாளியாக இருந்த சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு கடந்த காலத்தைப் பற்றிய பெருமித உணர்வு எப்படி இருக்கும்?
ஆறு வயதுச் சிறுவனால் என்னடா கருப்பா! என்று அழைக்கப்பட்ட அறுபது வயது முதியவருடைய பையன் இன்று ஹைகோர்ட் ஜட்ஜாக இருக்கிறார். என்னடா கருப்பா என்று கூப்பிட்டவருடைய மகன் அந்த கோர்ட்டில் வக்கீலாக இருந்து கருப்பன் மகனை ~மை லார்ட்| என்று அழைக்கிறார்.

இப்பொழுது நிகழ் காலத்தைப் பற்றிய கவலை யாருக்கு இருக்கும்?

 நம்மைப் பார்த்து சாமி என்று கூப்பிட்டவனை நாம் மை லார்ட் என்று அழைக்கிறோமே என்று கவலைப்படுகிற பார்ப்பன இளைஞனுக்கு இருக்குமா? அவனுக்கு கைகட்டி கும்பிடு போட்ட கருப்பன் மகனாக இருந்த ஜட்ஜூக்கு கவலை இருக்குமா?

பார்ப்பன இளைஞன் தன்னுடைய தாத்தன் பாட்டன் எல்லாம் பெற்ற பெருமையை இழந்து எல்லோருடனும் சமமாக இருப்பதை எண்ணிக் கவலைப்படுகிறான். அவன் இழந்த தன்னுடைய குலப்பெருமையை எதிர்காலத்தில் மீட்டெடுக்க கனவு காணுவான்.
ஆனால் அடிமை இனமாக இருந்து இன்று ஆளும் இடத்திற்கு வந்துள்ள ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் எதிர்காலத்திலும் தான் பெற்ற உயர்வு தன்னுடைய சந்ததியினருக்கும் கிடைக்க வேண்டும் என்று கவலைப்படுவான்
.
ஆக கடந்த காலத்தைப் பற்றிப் பெருமிதம் கொள்ளச் செய்வது கடந்த காலத்தில் உச்சாணிக் கொம்பிலிருந்த உயர்ஜாதிப் பார்ப்பன இளைஞனுக்குத்தான்.

அடிமை தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞனுக்கல்ல.

பார்ப்பனர்கள் எப்பொழுதும் தங்களுக்கு சமமாக மற்றவர்கள் வருவதை விரும்ப மாட்டார்கள். இன்று அனைவரும் சமமாக இருப்பது அவர்களுக்குக் கவலை அளிக்கிறது.

அந்த நிலையை மாற்றி மீண்டும் தங்களுடைய ஜாதியின் பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என்று கனவு காணுகிறான். அவனுக்காகத்தான் ஆர்எஸ்எஸ் இத்தகைய உணர்வுகளைத் தூண்டி விடுகிறது.

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞனே! நீ பெற்றிருக்கும் கல்வி உன்னுடைய வேலை உன்னுடைய பொருளாதார சமுதாய உயர்வு இவையெல்லாம் காப்பாற்றப்பட வேண்டுமானால் இந்த நிலைக்கு எதிராகப் போராடி பெற்றிருக்கும் உரிமையை நிலைநாட்ட உறுதி ஏற்காவிடில். அனைத்தும் ஒரு நொடியில் மாறிப்போகும். விழி! எழு! நட!! உன்னைச் சுற்றி நடக்கும் ஆபத்தை உணர்ந்துகொள்! பெற்ற உரிமையைப் பேணிப் பாதுகாக்க பெரியார் வழிக்குத் திரும்பு! அதுவே உனக்கு அருமருந்து!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக