வியாழன், 24 நவம்பர், 2016

நவம்பர் 27 மண்டல் நாயகன் மாண்புமிகு வி.பி.சிங் நினைவுநாள்

நவம்பர் 27
மண்டல் நாயகன் மாண்புமிகு வி.பி.சிங் நினைவுநாள்
இட ஒதுக்கீடு  சலுகை அல்ல!                      உரிமையும் பங்கீடும்!!

இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமும் இல்லை. வேலைவாய்ப்பை உருவாக்கித் தருகிற திட்டமும் இல்லை. இட ஒதுக்கீடானது தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு மட்டும் இல்லை. இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சேர்த்துத்தான் இட ஒதுக்கீடு.

இட ஒதுக்கீட்டின் பயனை அனுபவித்துக்கொண்டே தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களின் இட ஒதுக்கீட்டைக் குறை சொல்பவர்களுக்கு இட ஒதுக்கீட்;டின் வரலாறு தெரிய வேண்டியது அவசியமாகும். இட ஒதுக்கீட்டின் வரலாற்றில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடே மிகுதியான சிக்கலைச் சந்தித்துள்ளது.
பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில் பிராமணர்களே அதிக வேலைவாய்ப்புக்களில் இடம் பெற்றிருந்தனர். காரணம் அப்போது கல்வி கற்கும் உரிமை அவர்களுக்கு மட்டுமே இருந்தது. மற்ற மக்களுக்குக் கல்வி கற்கும் உரிமை மனுதர்மச் சட்டத்தின்படி  மறுக்கப்பட்டிருந்தது. 1835ல் மெக்காலே கல்வித்திட்டத்தின்படிதான் அனைவருக்கும் கல்வி கற்கும் வாய்ப்பு உண்டானது.
1892 -1904 காலக்கட்டத்தில் அரசுப்பணிகளில் பிராமணர்களே முழுவதும் ஆக்கிரமித்திருந்தனர்.

இந்திய சிவில் சர்வீஸ் பணிகளில் 16க்கு 15 பேரும் உதவிப் பொறியாளர்களில் 21க்கு 17 பேரும் உதவி கலெக்டர்களில் 120க்கு 77 பேரும் பிராமணர்கள் ஆக்கிரமித்திருந்தனர்.
1921ல் நடந்த நீதிக்கட்சி ஆட்சியின்போதுதான் அனைத்து மக்களும் அரசு வேலைவாய்ப்பில் இடம்பெறும் வகையில் வகுப்புரிமை மசோதா நிறைவேற்றப்பட்டது. வரலாற்றில் முதல் கம்யூனல் ஜி.ஓ வெளியிடப்பட்டது.

அமைச்சரவையிலும் ஆட்சி அதிகாரத்திலும் இருந்த பிராமணர்கள் அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்பொழுது இருந்த ஆளுநரும் அதனை நிராகரித்ததாலும் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. பிறகு 1927ல் ஆட்சிப் பொறுப்பில் இருந்த டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் இருந்த திரு. முத்தையா முதலியார் அவர்களால் வகுப்புவாரி உரிமைச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1934ல் சென்னை பார்ப்பனரல்லாதோர் இட ஒதுக்கீடு சட்டம் மத்திய அரசுப் பணிகளிலும் அமுல்படுத்தப்பட்டது.
இத்தனை சட்டங்களும் நடைமுறைகளும் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை எழுதுவதற்கு முன்பிருந்தே இருந்து வந்தன.

இது 1947 இந்தியா சுதந்திரம் பெறும்வரை எந்தவித வில்லங்கமும் இல்லாமல் தொடர்ந்து கிடைத்து வந்தது. சுதந்திரம் பெற்ற பிறகு அதனை ஒழித்துக்கட்ட பல சூழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. சென்னை மாகாணச் சட்டசபையில் இந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்தரவை ரத்து செய்ய முயற்சி நடந்தது. பார்ப்பனரல்லாத மக்களின் எதிர்ப்பால் அது நிறைவேறவில்லை. இனி மாகாணச் சட்டசபையை நம்பிப் பயனில்லை என்பதால் மத்திய சட்டசபை மற்றும் டில்லி சர்க்கார் ஆகியவற்றின் மூலம் தம் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள  பார்ப்பனர்கள் முயற்சித்து வந்தனர்.

1948 ஆம் ஆண்டு மே திங்களில் இந்திய சர்க்கார் எல்லா மாகாண அரசுகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அரசாங்க உத்தியோக நியமனங்களில் இந்து மதத்தின் ஜாதிப் பிரிவுகளுக்குள் பேதங்காட்டக்கூடாது என்றும் உத்தியோக நியமனங்களில் எந்த மாகாணமும் ஜாதிப் பாகுபாடுகள் காட்டக் கூடாது என்றும் தாழ்;த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைத்தவிர மற்றவற்றை எல்லா இந்துக்களுக்கும் பொதுவாகவே வழங்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறியது.

இதற்கு தமிழகத்தில் கட்சி அரசியல் பேதமின்றி பார்ப்பனரல்லாதார் அனைவரும் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் சென்னை மருத்துவக் கல்லூரியில் தாம் ஒரு பிராமணர் என்பதால் இடம் கிடைக்கவில்லை என்று செண்பகம் துரைசாமி என்பவரும் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என சீனிவாசன் என்பவரும் வழக்குத் தொடர்ந்தனர். இவ்வழக்கில் ஆஜரானவர் அண்ணல் அம்பேத்கருடன் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக இருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரும் ஒருவர். அவ்வழக்கின் இறுதியில் சென்னை மாகாண அரசாங்கத்தின் வகுப்புவாரி ஆணை செல்லாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கின் முழு விவரம் அறிய  : http://judis.nic.in/supremecourt/imgs1.aspx?filename=1194)
இந்த தீர்ப்பினை எதிர்த்து தமிழகம் முழுவதும் பெரும் போராட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் தலைமையில் திருச்சியில் நடைபெற்ற கம்யூனல் ஜி.ஓ மாநாட்டில் வகுப்புவாரி உரிமைக்காக சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்காக தமிழகமெங்கும் கொதித்தெழுந்து பல போராட்டங்கள் நடைபெற்றன. பெரியார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் காரணமாகவும் தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பின் காரணமாகவம் இறுதியில் நேரு தலைமையிலான மத்திய அரசு அண்ணல் அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்தபொழுது வகுப்புவாரி உரிமைக்காக இந்திய அரசியல் சட்டத்தின் முதல் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.
Article 15(4) சட்டத்திருத்தத்தின்படி கல்வியிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. குடிமக்கள் கல்வியிலும் சமூகத்திலும் பின் தங்கியுள்ள எந்த ஒரு வகுப்பினருக்கும் அவர்களின் முன்னேற்றத்திற்காக அரசு கொண்டுவரும் எந்த ஏற்பாட்டினையும் யுசவiஉடந 15(4) மற்றும் 29ன் 2வது உட்பிரிவோ எந்தத் தடையும் செய்யாது என்பதே அந்த சட்டத்திருத்தம்.

இதன்படி மாநில அரசால் தாழத்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட அனைவருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மத்திய அரசில் தாழ்த்தப்பட்டோருக்கு 15 சதவிகிதமும் மலைவாழ் மக்களுக்கு 7.5 சதவிகிதமும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

1951ல் சட்டத்திருத்தம் கொண்டுவரும்போதே பொருளாதார அளவுகோலைத் திணிக்க சிலர் முயற்சித்தனர். ஆனால் அதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அது தோல்வியடைந்தது. இந்த பொருளாதார அளவுகோலைச் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தவர் சியாம் பிரசாத் முகர்ஜி ஆவார். அவர் இன்றைய பிஜேபியின் அன்றைய அரசியல் வடிவான ஜனசங்கத்தை நிறுவியவர் ஆவார்.

அண்ணல் அம்பேத்கர் இந்து சட்ட சீர்திருத்த மசோதாவைக் கொண்டு வந்தபோது பெண்களுக்கான சொத்துரிமை விவாகரத்து உரிமை ஆகியவற்றுடன் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டு  உரிமைக்காகவும் குரல் கொடுத்தார். அதனை அமைச்சரவை ஏற்றுக்கொள்ளவில்லை. சர்தார் பட்டேலும் அதனை விவாதத்துக்கே எடுத்துக்கொள்ளக் கூடாது என்றார். சியாம் பிரசாத் முகர்ஜி போன்றவர்களும் அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனால் அண்ணல் அம்பேத்கர் தன்னுடைய சட்ட அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார்.

மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டைத் தீர்மானிக்க 1953ல் இந்திய அரசியல் சட்டம் 340வது பிரிவின்படி நேரு அரசாங்கம் காகா கலேல்கர் என்பவரது தலைமையில் ஒரு குழு அமைத்தது. இக்குழு இரண்டு ஆண்டுகளாக ஆய்வு செய்து 2000 சாதிகளை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்து பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கலாம் என அறிக்கை அளித்தது. ஆனால் அக்குழுவின் தலைவர் காகா கலேல்கர் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை என ஒரு கடிதத்தையும் சேர்த்துக் கொடுத்தார். அதனால் மத்திய அரசு அந்த பரிந்துரையை நிராகரித்தது. அறிக்கையின் முழு விவரம் தெரிந்துகொள்ள

 http://www.ispepune.org.in/PDF%20ISSUE/1991/JISPE2/report-backward-classes-comission.pdfhttps://en.wikipedia.org/wiki/Kalelkar_Commission

1962ல் மைசூர் அரசர் ஆட்சியில் இருந்த 68 சதவிகித இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் டெல்லி உச்சநீதிமன்றம் 50 சதவிகிதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது என 5 பேர் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்தது. 50 சதவிகிதத்துக்கு ஏதாவது அறிவியல் ஆதாரம் உண்டா என்றால் இல்லை.  தீர்ப்பு! அவ்வளவுதான்!

இத்தீர்ப்பின் முழு விவரம்

(https://indiankanoon.org/doc/599701/)

மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த திரு. சரண்சிங் அவர்கள் 1979ல் பிற்படுத்தப்பட்டோரின் நிலைமையை ஆய்வுசெய்து பரிந்துரை செய்ய பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்தார். அக்குழு இந்தியாவில் உள்ள 406 மாவட்டங்களில் 405 மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தது. ஆ.N.சீனிவாஸ் போன்ற மானுடவியல் நிபுணர்களிடமும் டாட்டா நிறுவனத்திலும்ää டில்லி பல்கலைக்கழக மானுடவியல் பிரிவு ஆகியவற்றிலும் ஆய்வு செய்தது.

மண்டல் குழு முழு விவரம்

1980ல் மண்டல் அவர்கள் தனது அறிக்கையையும் பரிந்துரைகளையும் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கிறார்.

இதில் முக்கியமானது

1) கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு
2) வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு
3) கடன் கொடுப்பதில் 27 சதவிகித இட ஒதுக்கீடு
4) பொருளாதார வளர்ச்சி;க்காக உற்பத்தி உறவுகளை புரட்சிகரமாக மாற்றி அமைத்தல்
5) அரசு உதவிபெறும் தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு
6) மீனவர்கள் போன்ற மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களை தாழ்த்தப்பட்டவர்களாக அறிவித்து அவர்களுக்கு தனித்தொகுதி அளிக்க வேண்டும்

மண்டல் தனது அறிக்கையில் 3740 சாதிகளை வகைப்படுத்தி பிற்படுத்தப்பட்டோர் 52 சதவிகிதம் எனக் கூறினார். ஆனால் 27 சதவிகிதம்தான் தர பரிந்துரை செய்தார். ஏனென்றால் 1962 உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி 50 சவிகிதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்பதால்.

OBC -27, SC,ST- 22.5 என்று விளக்கினார்.

மண்டல் அவர்கள் அறிக்கை அளித்த பின்னும் அந்தக் குழுவின் அறிக்கையை மத்திய அரசு வெளியிடவே இல்லை. அதனை வெளியிடுவதற்கே பல போராட்டங்களை நடத்த வேண்டி இருந்தது. வெளியிட்ட பிறகும் அந்தக் குழுவி;ன் அறிக்கையை அமுல்படுத்தக்கூடாது என இட ஒதுக்கீட்டு எதிரப்பாளர்கள் கிளர்ச்சி செய்தார்கள். எனவே மத்திய அரசு அதனை அமுல்படுத்தாமல் கிடப்பில் போட்டது.

அதனை அமுல்படுத்தக்கோரி நாடெங்கிலும் திராவிடர் கழகத்தின் சார்பாக 42 மாநாடுகளும் 16 போராட்டங்களும் நடத்தப்பட்டன. மண்டல் அறிக்கை அளிக்கப்பட்டு பத்து வருடங்கள் கழித்து 1989ம் ஆண்டு பிரதமராய்ப் பொறுப்பேற்ற வி.பி.சிங் அவர்கள் அந்த அறிக்கையினை அமுல்படுத்த 13-08-1990 அன்று உத்தரவு பிறப்பித்தார். அதில்

1) சிவில் பணிகளில் மட்டும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு வேலைவாய்ப்புக்களில் வழங்கப்படும் என்றும்
2) நீதித்துறையிலும்ää அறிவியல் உயர் ஆய்வுத் துறைகளிலும் இட ஒதுக்கீட்டுக்கு விலக்களித்தும்
3) மண்டல் அறிக்கையில் உள்ள 3740 சாதிகளுக்கும் இட ஒதுக்கீடு அளிக்காமல் மத்திய அரசுப் பட்டியல் மற்றும் மாநில அரசுப்பட்டியல்  என இரண்டிலும் உள்ள 2000 சாதிகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் வி.பி.சிங் அறிவித்தார்.

நீண்டகாலப் போராட்டத்திற்குப் பிறகு அமுல்படுத்தப்பட்ட மண்டல் அறிக்கையை எதிர்த்து இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள்; கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ராஜீவ் கோஸ்வாமி என்ற மாணவர் தீக்குளிக்க முயன்று பலத்த காங்களுடன் தப்பினார். சுரேந்தர் சிங் சவுகான் என்ற மாணவர் தீக்குளித்து இறந்துபோனார்.

இந்த இட ஒதுக்கீட்டை அமுல்படுத்தியதால் வி.பி.சிங் ஆட்சிக்கு ஆபத்து வந்தது. அந்த அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பிஜேபி விலக்கிக் கொள்வதாக அறிவித்தது. வி.பி.சிங் அவர்கள் என்னவானாலும் பரவாயில்லை என உறுதியாக நின்று மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்தினார். இதனால் அவரது ஆட்சியும் கவிழ்ந்தது.

1991ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. பிரதமராகப் பொறுப்பேற்ற பி.வி.நரசிம்மராவ் அவர்கள் மண்டல் கமிஷனை நிறைவேற்ற மேலும் சில பரிந்துரைகளைச் சேர்த்து புதிய சட்டம் இயற்றினார். அதில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதுபோல் பொருளாதாரத்தில் பின்தங்கிய இட ஒதுக்கீட்டில் இடம்பெறாத சமூகத்தைச் சேர்ந்த பிரிவனருக்;கும் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதனையும் அதில் சேர்த்தார்.

ஏற்கனவே 1962ல் உச்சீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்தைத் தாண்டக்கூடாது என்ற விதி இருந்தும் மேலும் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கினார். 1992ல் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் ஒன்பதுபேர் கொண்ட அமர்வு  கீழ்க்கண்ட தீர்ப்பினை வழங்கியது.

1) வி.பி.சிங் அவர்கள் கொண்டு வந்த சட்டமும் இட ஒதுக்கீடும் செல்லும் எனவும
2) உயர்சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க நமது அரசியல் அமைப்புச்சட்டம் இடம் கொடுக்கவில்லை எனக்கூறி பி.வி.நரசிம்மராவ் அரசு கொண்டு வந்த 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லாது எனவும
3) பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதாரத்தில் உயர்ந்த பிரிவினரைக் கண்டறிந்து CREAMY LAYER AND NON CREAMYLAYERஎன்பதை அரசே முடிவுசெய்து கொள்ளலாம் எனவும்
4) மொத்த இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது எனவும் தீர்ப்பளித்தது.

தீர்ப்பின் முழு விவரம்

(http://judis.nic.in/supremecourt/qrydisp.asp?tfnm=16589)

ஆகவே,இப்போது நடைமுறையில் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடானது, மண்டல் கமிஷன் அறிக்கையை மிக நெருக்கடிக்கு இடையில் அமுல்படுத்தி சமூக நீதியை நிலைநாட்டிய பெருமை வி.பி.சிங் அவர்களையே சாரும்.

இவண் : திராவிடர் தொழிலாளர் கழகம், பெல்திருச்சி -14.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக