திங்கள், 14 நவம்பர், 2016

இராம கோபாலன் முதுகில் பூணூல் தொங்குகிறது. அர்ஜூன் சம்பத் முதுகில் அது இல்லை. ஆக இராம. கோபாலன் வேறு. அர்ஜூன் சம்பத் வேறுதானே!




சென்னை அய்அய்டி யில் படிக்கும் மாணவர்கள் “அம்பேத்கர் -பெரியார் வாசகர் வட்டம்” என்ற அமைப்பினைத் தொடங்கி ஜாதி ஒழிப்பு சமூகநீதி இவற்றை மய்யப்படுத்தி கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதில் எண்ணிக்கையில் மிகவும் குறைவான சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முக்கியமான பதவிகளில் ஆக்கிரமிப்புச் செய்துள்ளார்கள் என்றும் கீழ்மட்ட உடலுழைப்புப் பணிகளில் முழுவதும் தாழ்த்தப்பட்டவர்களே நியமிக்கப்படுகிறார்கள் என்றும் பேசியுள்ளனர். இதில் என்ன குற்றம்?

அதேபோல ஒரு மனிதனின் உணவுப் பழக்கத்தில் தலையிடும் விதத்தில் மாட்டுக்கறிக்குத் தடை போடுவது குறித்தும் துண்டறிக்கை வெளியிட்டுள்ளனர். இதிலும் என்ன குற்றம் இருக்கிறது? மாணவர்கள் சமூக சிந்தனையோடு செயல்படுவது கூடாதா?


அய்அய்டியில் முன்பு தாழ்த்தப்பட்டோருக்கு மட்டும் இட ஒதுக்கீடு இருந்து வந்தது. அப்போது உயர்ஜாதி மாணவர்களும் ஆசிரியர்களும் தாழ்த்தப்பட்ட மாணவர்களை தகுதி இல்லாதவர்கள் - திறமையில்லாதவர்கள் என்று கிண்டலும் கேலியும் செய்து வந்தார்கள். அதன் காரணமாக மனம் உடைந்த தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.  அங்கு பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியபோது அதை எதிர்த்து  ஆர்எஸ்எஸ்ஸின் மாணவர் அமைப்பு போராடியது. அங்கு அந்த அமைப்பு செயல்படலாமாம். இட ஒதுக்கீட்டுக்கு எதிராக அவர்கள் அரசை எதிர்த்துப் போராட்டமும் நடத்துவார்களாம். ஆனால் அம்பேத்கர் பெரியார் பெயரில் மட்டும் எந்த அமைப்பும் இயங்கக் கூடாது என்றால் அது என்ன நியாயம்?

இது பற்றி ஊடகங்களில் விவாதம் வருகின்றபொழுது சங்பரிவார் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்கள். அம்பேத்கர் பெயரில் அமைப்பு இருப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை என்றும் அவர்கள் செயல்பாட்டைத்தான் எதிர்க்கிறோம் என்றும் பேசுகிறார்கள். அதைவிட அர்ஜூன் சம்பத் என்ற நபர் தொலைக்காட்சியில் பேசும்போது அம்பேத்கர் பெயர் இருக்கலாமாம். பெரியார் பெயர் இருக்கக்கூடாது என்கிறார். அம்பேத்கர் வேறு பெரியார் வேறு என்று பிரிவினைவாதம் செய்கிறார். அவருக்கு அம்பேத்கர் கொள்கையும் தெரியவில்லை. பெரியார் கொள்கையும் தெரியவில்லை என்பதுதான் உண்மை. அம்பேத்கர் பெயரை எதிர்த்தால் இவர்கள் பிழைப்பு நடத்த முடியாது என்பதால் பெரியாரையும் அம்பேத்கரையும் பிரித்துக் காட்ட முயல்கிறார்கள்.

அந்த அர்ஜூன் சம்பத் இந்து மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி வைத்திருக்கிறார். ஏற்கனவே இராம கோபாலன் இந்து முன்னணி என்று வைத்திருக்கிறார். இந்து முன்னணி இருக்கும்போது இந்து மக்கள் கட்சி எதற்கு? அது வேறு இது வேறு என்பதால்தானே?

இராம கோபாலன் முதுகில் பூணூல் தொங்குகிறது. அர்ஜூன் சம்பத் முதுகில் அது இல்லை. ஆக இராம. கோபாலன் வேறு. அர்ஜூன் சம்பத் வேறுதானே! அவருக்கு உச்சிக்குடுமி உண்டு. இவருக்கு இல்லை. ஆக அவர் வேறு இவர் வேறுதானே!

காரணம் அவர் பிராமணர். இவர் சூத்திரர். பிராமணர் பிர்மாவின் முகத்தில் பிறந்தவர். இவர் காலில் பிறந்தவர். அவர் உயர்ந்தவர். இவர் தாழ்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. எப்படி? சூத்திரன் என்றால் பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்கிறது மனுதர்மம். இது சுயமரியாதைக்கு இழுக்கு அல்லவா? அந்த சுயமரியாதை உள்ள எவனுக்கும் பெரியார் தேவைப்படுவார். சுயமரியாதை அற்ற சூத்திர முண்டங்களுக்கு பெரியார் தேவை இல்லைதான்.

சங்கராச்சாரியை சந்திக்கச் சென்ற சுப்பிரமணியசாமிக்கு நாற்காலி கொடுத்து அமர வைக்கிறார் சங்கராச்சாரி. ஆனால் மந்திரியாக இருக்கும் பொன்.இராதாகிருஷ்ணன் சங்கராச்சாரியைச் சந்திக்கச் சென்றபொழுது தரையிலே அமர வைக்கப்படுகிறார்.

பொன் இராதா கிருஷ்னணுக்கு சுயமரியாதை இல்லாத காரணத்தினால் தரையிலே அமர்வது அவமானமாகத் தெரியவில்லை. அதனால் அவருக்குப் பெரியார் தேவைப்படவில்லை. அதுபோல் சூத்திரன் என்றாலும் வைப்பாட்டி மகன் என்றாலும்  அர்ஜூன் சம்பத்துக்கு அவமானமாகத் தெரியவில்லை. அதனால் அவருக்கும் பெரியார் தேவையில்லை.
ஆனால் சுயமரியாதை உள்ள அய்அய்டி மாணவர்களுக்கு பெரியார் தேவைப்படுகிறார். அவர் பெயர் கூடாது என்று சொல்ல எவனுக்கும் உரிமையில்லை. எனவே அய்அய்டி நிறுவனத்தில் பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டத்திற்கான தடையை நீக்க அனைவரும் குரல் கொடுப்போம். சுயமரியாதை உணர்வு பெறுவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக