ஞாயிறு, 13 நவம்பர், 2016

விவசாயம் பாவமான தொழில். அதனால் அதனை பிராமணன் செய்யலாகாது.



நமது நாடு விவசாய நாடு. விவசாயம்தான் முதுகெலும்பு என்று சொல்லப்படுகிறது. நம்முடைய திருவள்ளுவர்
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழன்றும் உழவே தலை

என்கின்றார். எவ்வளவு துன்பப்பட்டு உழைக்க வேண்டி இருந்தாலும் உணவிற்காக அனைவரும் உழவுத் தொழிலைச் சார்ந்து இருப்பதால் உழவே முதன்மையான தொழில் என்கிறார் நம் வள்ளுவப் பேராசான். ஆனால் இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சட்டமாக இருந்த மனுதர்ம சாஸ்திரம் என்ன சொல்கிறது என்றால்

“சிலர் பயிரிடுதலை நல்ல தொழில் என்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்பு பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது. ஏனெனில் இரும்பை முகத்திலேயுடைய கலப்பையும் மண்வெட்டியும் பூமியிலுண்டான பல பல ஜெந்துக்களையும் வெட்டுகிறதல்லவா?”      (மனுதர்மம் அத்தியாயம் 10 சுலோகம் 84)

“பிராமணனும்; சத்திரியனும் வைசியன் தொழிலான வணிகம் செய்து பிழைக்கலாம். ஆனால் அதிக கஷ்டமும் துயரம் தருவதுமாயுள்ள விவசாயத்தை ஒருபோதும் செய்யலாகாது. அதைச் செய்யாவிட்டால் உயிர் வாழ முடியாதபோது அதை அதாவது விவசாயத்தை அந்நியனைக் கொண்டு செய்விக்க வேண்டும்.

(மனுதர்மம் அத்தியாயம் 10 சுலோகம் 83.)

விவசாயம் பாவமான தொழில். அதனால் அதனை பிராமணன் செய்யலாகாது. அப்படிச் செய்ய நேர்ந்தாலும் அந்நியனைக் கொண்டு செய்யலாம் என்று மனுதர்மம் சொல்லுகிறது. அந்த சட்டத்தின்படிதான் இதுவரை ஒரு பார்ப்பானும் ஏர் பிடித்ததில்லை. ஒரு பாப்பாத்தியும் களையெடுத்தில்லை. நம்முடைய மக்கள் உழைத்துக் கொடுத்தால் நோகாமல் நல்ல பச்சரிசியும் பருப்பும் காய்கறிகளும் நாம் வளர்த்து எடுத்துக்கொடுத்த நெய்யும் தின்று கொழுத்து விட்டு நம் மக்களையே சூத்திரன் என்றும் கீழ்ஜாதி என்றும் சாஸ்திரங்களை எழுதி வைத்துக் கொண்டார்கள்.

இந்த சாஸ்திரத்தை மீறி இரண்டு பார்ப்பனர்கள் சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் கும்பகோணத்தில் ஏர்பிடித்து விவசாயம் செய்தார்கள். அதில் கிடைத்த நெல்லை சங்கராச்சாரியிடம் காணிக்கையாகக் கொடுக்க வந்தபோது ~இது பாவத்தொழிலால் சம்பாதிக்கப்பட்டது. அதiனால் அந்தக் காணிக்கையை வாங்க மாட்டேன்| என்று சங்கராச்சாரி மறுத்துவிட்டார்.

கொலை செய்பவன், கொள்ளையடித்தவன் திருடுபவன் பொய் சொல்பவன்அரசாங்கத்தை வரி ஏய்ப்புச் செய்பவன் எல்லாம் கொடுக்கும் காணிக்கைகளைப் பெற்றுக் கொள்வாராம். அது பாவமில்லையாம். ஆனால் பிராமணன் விவசாயம் செய்ததால் கிடைத்த பொருளை பாவத்தொழிலில் சம்பாதித்தது என்று கூறி வாங்க மறுப்பாராம். இதுதான் இந்து மத சாஸ்திரம்.

இதனைத்தான் இந்த நாட்டின் சட்டமாக்க வேண்டும் என்கிறது ஆர்எஸ்எஸ் சங்பரிவார்க்கூட்டம்.

இப்படி பார்ப்பனர்கள் யாரும் இத்தொழிலில் இல்லை  என்பதால்தான் விவசாயம் இன்றும் நலிவடைந்த தொழிலாக ஆக்கப்பட்டுள்ளது.

மற்ற தொழில் செய்பவனெல்லாம் கொள்ளை இலாபம் ஈட்டுகிறான். ஆனால் விவசாயி; மட்டும் இன்னும் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறான். சாஸ்திரங்கள் இவ்வாறு கூறுவதனாலோ என்னவோ அரசாங்கமும் விவசாயத்தை ஒழித்துக்கட்ட தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தனியார் நிறுவனத்துக்கு தாரை வார்க்க 80 சதவிகித விவசாயிகளின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற விதியைத் தூக்கியெறிந்து நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.

விவசாய நிலத்தையெல்லாம் தனியாருக்குத் தாரை வார்த்து விட்டால் எங்கிருந்து நெல் விளையும்? எப்படி கோதுமை விளையும்? எதனை இவர்கள் தின்பார்களாம்? ஹைடெக் பிரதமர் ஒரு வேளை கம்ப்யூட்டரில் நெல்லையும் கோதுமையையும் டவுன்லோடு செய்து தருவாரோ?

ஆமாம். இங்கே ஏதோ கிசான் சங்கம் னு ஒரு போஸ்டர் ஒட்டியிருந்ததே! ஏற்கனவே துவாக்குடி இந்துமுன்னணிக்காரன் ராத்திரியோட ராத்திரியா திருட்டுத்தனமா வந்து நோட்டீஸ் ஒட்டிட்டுப் போன மாதிரி விவசாய சங்கத்துக்காரங்க யாரும் CCTV காமிராவை யெல்லாம் மீறி யாருக்கும் தெரியாம திருட்டுத்தனமா வந்து ஒட்டிட்டுப் போயிட்டாங்களோ?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக