திங்கள், 7 நவம்பர், 2016

பணிநியமனங்களில் வெளிமாநிலத்தவரின் ஆதிக்கம்



பணிநியமனங்களில் வெளிமாநிலத்தவரின் ஆதிக்கத்தை எதிர்த்து திராவிடர் தொழிலாளர் கழகமும் திராவிடர் கழகமும் போராடி வருகிறது. பொறியாளர் நியமனத்தில் முழுக்க பிற மாநிலத்தவரின் ஆதிக்கம் இருந்த நிலை மாறி ஓரிருவர் தமிழர் இடம்பெறக்கூடிய நிலைதான் உருவாகியுள்ளது. சூப்பர்வைசர் 38 பேர் எடுக்கப்பட்டதில் 22 பேர் பிற மாநிலத்தவர்கள். அதில் 15 மலையாளி. ஆந்திராக்காரர் 5. பிற மாநிலத்தவர் 2. தமிழர்கள் அதிலும் சிறுபான்மைதான். 2005ம் ஆண்டு 117 ஆர்டிசான்கள் எடுக்கப்பட்டதில் 5 பேர் வேறு மாநிலத்தவர். இதிலெல்லாம் சட்டப்படியான இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை.

250 பேர் ஆர்டிசான்கள் எடுக்கப்பட்டபோதுதான் இட ஒதுக்கீட்டில் நடத்தப்பட்ட மோசடி கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றம் சென்று தடைஆணை பெறப்பட்டது. நீதிமன்றத்தீர்ப்புக்கு முன்பு நிர்வாகம் நீதிமன்றத்தில் எழுதிக்கொடுத்துவிட்டு எடுக்கப்பட்ட 227 பேரில் 50க்கும் மேற்பட்டோர் பிற மாநிலத்தவர்தான். அவர்கள் அனைவரும் வரும் 21ந் தேதி நடைபெற உள்ள எழுத்துத் தேர்வில் மீண்டும் கலந்துகொண்டு தேர்வு எழுதஉள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்ஸாமில் உல்ஃபா தீவிரவாதிகள் தங்கள் மாநிலத்தில் வேலைபார்க்கும் பிற மாநிலத்தவரை எதிர்த்துத் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கடந்த மாதம் அவர்களின் தாக்குதலுக்குப் பலியானவர்கள் அனைவரும்    செங்கல் சூளையில் கூலிக்கு வேலை பார்த்தவர்கள்.

அங்கெல்லாம் இதுபோன்ற கடைநிலை வேலை பார்க்கின்றவர்களே பிற மாநிலத்தவர் என்று சொல்லித்தாக்கப்படும் போது நம் நிறுவனத்தில் மிக உயர்ந்த கொழுத்த சம்பளம் உள்ளபதவிகளில்  இதுபோன்ற ஆதிக்கம் நடைபெற்றுத் தமிழன் உரிமை பறிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்? இங்கே உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து   இலட்சக்கணக்கில் இளைஞர்கள் காத்துக் கிடக்கும்பொழுது வேலைகளெல்லாம் இப்படிப் பிற மாநிலத்தானுக்குக் கொள்ளைபோனால் வேலையில்லாமல் காத்துக்கிடக்கும் இளைஞர்கள் எத்தனை காலத்திற்குப் பொறுமையாக  இருப்பார்கள்?

அஸ்ஸாமில் ஏற்பட்டநிலை இங்கேயும் தேவையா?

எனவே கொந்தளிப்பு இல்லாத அமைதியான மண்ணாகத் தமிழகம் இருக்க வேண்டுமானால் அனைத்துப் பணி நியமனங்களிலும் பிற மாநிலத்தவர் ஆதிக்கம் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும். கலைஞர் அரசின் ஆணையின்படி  தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களை மட்டுமே அழைத்து இங்கு நியமனம் செய்ய வேண்டும் என்று நிர்வாகத்தை எச்சரிக்கிறோம்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் 18-01-2007 அன்று நடத்த உள்ள ஆர்ப்பாட்;டத்தில் திராவிடர் தொழிலாளர் கழகமும் பங்கேற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே, திராவிடர் தொழிலாளர் கழகத் தோழர்கள் அனைவரும் இதில் தவறாது கலந்துகொள்ள வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்.
                     
இவண்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக