திங்கள், 14 நவம்பர், 2016

எவன் ஒருவன் இந்த சமுதாயத்துக்கு அத்தியாவசியமான பணியினைச் செய்கிறானோ அவன் மிகமிகக் கீழ்ஜாதி



சேவை என்பது எந்தப் பலனுமின்றி இருக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் திருவாளர் மோகன் பகவத் அவர்கள் கூறியிருக்கிறார்களாம். இதையேதான் கிருஷ்ணன் கீதையிலும் சொல்லியிருக்கிறான் என்று படித்தவர்கள்(?) சொல்லி இருக்கிறார்கள்.

இந்து மதத்தில் சேவை செய்பவன் பலனை எதிர்பார்க்கக் கூடாதாம். அதனால்தான் ஒரு சூத்திரனிடத்தில் கூலி கொடுத்தோ கூலி கொடுக்காமலோ ஒரு பிராமணன் வேலை வாங்கலாம் என்று மனுதர்மம் சொல்லுகிறது. அப்படி கூலி பெற்றுக்கொண்டோ கூலி பெறாமலோ வேலை செய்யும் சேவகர்களுக்கு இந்து மதத்தில் என்ன மரியாதை?

எவன் ஒருவன் இந்த சமுதாயத்துக்கு அத்தியாவசியமான பணியினைச் செய்கிறானோ அவன் மிகமிகக் கீழ்ஜாதி. ஒரு துப்புரவுப்பணி என்பது சமுதாயத்தின் அத்தியாவசியமான பணி. அந்தப் பணி ஒழுங்காக நடக்கவில்லையென்றால் நகரமே நாறிவிடும். நகரம் நோய்களின் பிறப்பிடமாகப் போய்விடும். அத்தகைய தூய்மைப்பணி செய்பவனுக்கு இந்து மதம் கொடுத்திருக்கும் பெயர் என்ன? தோட்டி.. அவன் ஒரு ஆறு மாதத்திற்கு தன்னுடைய பணியைச் செய்யவில்லையானால் நாடும் நகரமும் என்னவாகும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அதே போல ஒருவனது முடியை மழித்து சீர்திருத்தி அழகுபடுத்துபவனுக்கு இந்துமதம் கொடுத்திருக்கும் பெயர் அம்பட்டன். துணியை வெளுத்து அழகான உடையைக் கொடுப்பவருக்குப் பெயர் வண்ணான்;. உங்கள் வீட்டுக் கிழடு கெட்டைகள் செத்துப் போனாலோ ஏன் சங்கராச்சாரியே செத்துப்போனாலோ உடலை அடக்கம் செய்யாவிட்டால் அது அழுகி நாறிப்போகும். அந்த உடலை எரித்து உனக்கு சாம்பலைத் தருகிறவனுக்கு உன் இந்து மதம் கொடுத்திருக்கும் பெயர் வெட்டியான். நீ அறுசுவை உணவு உண்ண எல்லாவற்றையும் விளைவித்து ஆறுவேளை உண்ண உணவு கொடுக்கும் விவசாயி உனக்குச் சூத்திரன்.

இப்படி அத்தியாவசியமான தொழில்களைச் செய்பவனையெல்லாம் இழிவான பெயர்களில் அழைப்பது. அவர்களைத் தாழ்ந்த ஜாதி என்று சொல்வதுதான் அவர்களது சேவைக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை.

அதே நேரத்தில் கோயிலில் மணி அடிக்கிறாரேää அவரால் சமுதாயத்திற்கு என்ன பலன்? அவர் ஆறு மாதத்திற்கு பூஜை செய்வதை நிறுத்தி விட்டால் யாருக்கு என்ன நட்டம்? நட்டமில்லை என்பதோடு இலாபம்தான். தேங்காய் பழம் செலவு இல்லை. சூடம் சாம்பிராணி செலவு இல்லை. உண்டியலில் காசு போட வேண்டிய தேவையில்லை. கோயிலுக்குப் போகும் நேரமும் மிச்சம்.
ஆனால் இப்படி எந்தப் பலனுமில்லாத தொழிலைச் செய்யும் பார்ப்பனர் மட்டும் உங்களுக்கு பிராமணன்? உயர்ந்த சாதி. எங்காவது ஒரு அய்யர் தட்டில் காசு போடவில்லையென்றால் பக்தர்களுக்கு முகமலர்ச்சியோடு அர்ச்சனை செய்வாரா? திருமணம் செய்து வைக்கும் புரோகிதர் கருமாதி செய்யும் பார்ப்பனர் காசில்லாமல் மந்திரத்தை ஓதுவாரா? ஏன் உனது கடவுள்களே கூட காசில்லாத பக்தனுக்கு ஓசியில் தரிசனம் தருவாரா?

நீங்களா சேவை பற்றிப் பேசுவது? நல்ல ஆரோக்கியமான மனிதனைக்கூட தீண்டாமல் ஒதுக்கி வைத்தவர்கள் நீங்கள். தொழுநோயாளிகளைக் கூட தொட்டு மருத்துவம் செய்தவர்கள் அவர்கள். சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக் கூடாது என்றவர்கள் நீங்கள். எல்லோருக்கும் கல்வி கொடுத்தவர்கள் அவர்கள்.

உங்களால் புறக்கணிக்கப்பட்ட மக்கள் யாரிடம் அன்பும் அரவணைப்பும் கிடைக்கிறதோ அவர்களிடம் அடைக்கலம் தேடுவது இயற்கைதானே! இதனை மதமாற்றம் என்று கூச்சல் போடும் நீங்கள்ää அந்த மக்கள் மீண்டும் தாய் மதம் வந்தால் அவர்களை எல்லோரையும் இந்துதான் என்று சமமாக நடத்துவீர்களா? மூன்று நாலு தலைமுறை ஆராய்ச்சி செய்து எந்த ஜாதியிலிருந்து சென்றார்களோ அந்த ஜாதியில்தானே சேர்க்கிறீர்கள்? ஒரு பாதிரியாராக இருக்கும் ஆரோக்கியசாமி இங்கே வந்தால் அவரை சீரங்கம் கோயிலில் அர்ச்சகராக ஆக்குவீர்களா?

இரண்டாயிரம் ஆண்டுகளாய் எங்களுக்குக் கல்வி கொடுக்காமல் மறுத்து எங்களது அறிவைத் திருடிய நீங்களா அறிவுத் திருட்டைப்பற்றிப் பேசுவது?

எந்த மதத்தையும் நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. மதம் என்பது அவரவர் தனிப்பட்ட பிரச்சினை. ஆனால் மதவெறியைத் தூண்டி அதில் குளிர் காய நினைப்பதுதான் தவறு. மகராஷ்டிரா அரசு மாட்டுக்கறி தின்பதைத் தவறு என்று அறிவித்திருக்கிறது. வேதகாலத்தில் யாகம் என்ற பெயரால் ஆடு மாடு குதிரை ஆமைää உட்பட தீயில் வதக்கித்தின்ற கூட்டம் இன்று பசுவதை என்ற பெயரில் மதவெறியைத் தூண்டுவதற்குப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இன்று உலகில் முக்கால்வாசிப் பேருக்கு மேல் உணவாகப் பயன்படும் மாட்டுக்கறி உண்ணுவதை அரசியலாக்குவது ஏன்?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக