ஞாயிறு, 20 நவம்பர், 2016

பிஜேபி என்பது பிராமின் ஜனதாப் பார்ட்டிதான்

காங்கிரஸில் சாமிநாதனுக்கும் தீட்சதருக்கும் இன்னும் பல பார்ப்பன வேட்பாளர்களுக்கும் தந்தை பெரியார் ஓட்டுப்போடச்சொன்னார். எதற்காக?

பார்ப்பனரை பெரியார் ஏற்றுக்கொண்டாரா?            

இல்லை பார்ப்பனர்கள்தான் பெரியாரை ஏற்றுக்கொண்டார்களா?

பிறகு ஏன் அவர்களுக்கு ஓட்டுப்போடச்சொன்னார்? கல்விவள்ளல் காமராசர் ஆட்சி நீடிக்க இவர்கள் கைதூக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

அந்த இடத்தில் ஒரு கழுதை நின்றிருந்தாலும் பெரியார் ஓட்டுப்போடச் சொல்லி இருப்பார்.

அதேபோலத்தான் பிஜேபியில் எஸ்சி-எஸ்டி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதும். இவர்கள் ஆட்சியில் அமரவும் ஆட்சி நீடிக்க கைதூக்கவும் ஒரு ஆள் தேவை. அவ்வளவுதான் அவர்கள் வேலை.

கொள்கை முடிவு எடுக்கவோ. தலைமை தாங்கவோ அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. மண்டல் குழுவின் தாக்கத்தினால் பிஜேபிக்குக்கிடைத்த பார்ப்பனக்கட்சி என்ற முத்திரையினை மாற்றிக் காட்டுவதற்காக சிறிதுகாலம் தலைவராகப் போடப்பட்டார் பங்காருலட்சுமணன்.

அவர் கதி என்னாயிற்று?

தமிழ்நாட்டில் தனக்கு இருந்த அவப்பெயரைப்போக்க கிருபாநிதியைத் தலைவராகப்போட்டது பிஜேபி. அவர் கதி என்னவானது? வெந்து நொந்து நூலாகி வெளியேறினார் கிருபாநிதி. அவ்வளவுதான் பிஜேபியின் தாழ்த்தப்பட்டோர் மீதான பாசம். தாழ்த்தப்பட்ட உறுப்பினர்களை எங்காவது இவர்கள் பொதுத்தொகுதியில் நிறுத்தி வெற்றிபெற வைத்திருக்கிறார்களா?

அண்ணல் அம்பேத்கார் வட்டமேஜை மாநாட்டில் வாதாடிப்பெற்ற தனித்தொகுதி முறை இன்னமும் நீடித்திருக்கின்ற காரணத்தினாலும் அந்தத் தொகுதிகளில் வேறு யாரும் போட்டியிட முடியாது என்பதனாலும் தாழ்த்தப்பட்டோரை நிறுத்தியே ஆகவேண்டும் என்ற காரணத்தினாலும்தான்   அவர்களை பிஜேபி நிறுத்தியிருக்கிறதே தவிர அவர்கள்மீதுள்ள பாசத்தினால் அல்ல.
பிஜேபி (BJP) என்பது பிராமின் ஜனதா பார்ட்டிதான்.

மனுதருமப்படி வருணாசிரம தர்மம் நீடித்திருக்க வேண்டும் என்பது அவர்களது கொள்கை. அவர்களது மாடல் நிர்வாகியான மோடியின் அரசு குஜராத்தில் வருணாசிரமத்தை ஆதரித்தும் அந்த வருணாசிரம முறை முன்னோர்களால் நமக்குக் கிடைத்த வெகுமதி என்றும் வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வருணாசிரமப்படி உலகமே பார்ப்பனர்களுக்காகத்தான் சொந்தம். மற்றவர்கள் அனைவரும் பார்ப்பனர் தயவால் உயிர்வாழவேண்டியவர்கள்தான்.

இது மனுதருமத்தில் மிகத்தெளிவாகவே குறிக்கப்பட்டுள்ளது.  இந்த உலகமே பார்ப்பனர்களுக்காக என்று சொல்லும்போது அவர்கள் கட்சியை பிராமின் ஜனதா பார்ட்டி என்று சொல்வதில் என்ன தவறு?

இவர்கள் அமைக்கும் இந்து ராஜ்யம் எப்படிப்பட்டது? அல்லது அவர்கள் சொல்லும் இந்துதர்மம் எப்படிப்பட்டது? இதோ அவர்களது குருவான குரு கோல்வாக்கர் எழுதிய  Bunch of thoughts என்ற நூலில் இந்துரா~;டிரத்தின் இலக்கணமாகக் கூறுகிறார் :

‘தென்னாட்டில் ஒரு ஆங்கிலேய அதிகாரி இருந்தார். அவருக்கு உதவியாளராக அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் இருந்தார். அவர் நாயுடு வகுப்பைச்சேர்ந்தவர். அந்த ஆங்கிலேய அதிகாரியின் பியூனாக இருந்தவர் ஒரு பார்ப்பனர். ஓருநாள் அந்த ஆங்கிலேய அதிகாரி பார்ப்பன பியூன் பின்தொடர வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அவரது உதவியாளராக இருந்த அந்த நாயுடு சமுதாயத்துக்காரர் வந்தார். அவர் ஆங்கிலேய அதிகாரியைப்பார்த்துக் கைகுலுக்கினார். ஆனால் பிராமண பியூனைப்பார்த்தவுடன் காலைத்தொட்டு வணங்கினார்.

அதைப்பார்த்து வியப்படைந்த அந்த ஆங்கிலேய அதிகாரி நான் உன்னுடைய பெரிய அதிகாரி. என்னிடம் நீ கைதான் குலுக்கினாய். ஆனால் என்னுடை பியூனின் காலைத் தொட்டு வணங்குகிறாயே. இது என்ன பிரச்சினை? என்று கேட்கிறார். அதற்கு அந்த உதவியாளர் பதில் சொல்கிறார் : நீங்கள் என்னுடைய பெரிய  அதிகாரியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு மிலேச்சர். ஆனால் அவர் நாங்கள் வணங்கக்கூடிய பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவரைத் தொழ வேண்டியது எனது கடமை என்று சொன்னார்.

இதுதான் இந்து தர்மம்  என்கிறார்’ கோல்வாக்கர்.

ஓரு பியூனாக இருந்தாலும் அவன் பார்ப்பானாக இருந்தால் அவனது காலை பெரிய அதிகாரிகளே தொட்டு வணங்கவேண்டும் என்பதுதான் இந்துராஷ்டிரத்தின் நோக்கம் என்று பச்சையாகவே வெளிப்படுத்துகின்ற ஆர்எஸ்எஸ் ஸின் அரசியல் பிரிவான பிஜேபி பார்ப்பனக்கட்சி அல்லாமல் வேறு என்னவாம்? மேலும் இவர்களால் தேசபக்த திலகம் என்று வர்ணிக்கப்படுகிற பாலகங்காதர திலகர் 1918ல் பார்ப்பனரல்லாதோர் சட்டப் பேரவையில் தனிப்பிரதிநிதித்துவம் கோரிப் போராடியபோது  என்ன சொன்னார்
தெரியுமா?

எண்ணெய்க்காரர்களும். புகையிலைக்கடைக்காரர்களும்வண்ணார்களும் (பார்ப்பனரல்லாதாரையும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் இப்படித்தான் அவர் வர்ணித்தார்) சட்டமன்றத்துக்குச்செல்ல ஆசைப்படுவது ஏன் என்று தனக்குப் புரியவில்லை’ என்றார்.

அவரது கருத்துப்படி இவர்களின் வேலை சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதே தவிர சட்டங்கள் இயற்றும் அதிகாரத்துக்கு ஆசைப்படுவது கூடாது என்பதாகும்.

ஆதாரம்: அம்பேத்கர் எழுதிய காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாத மக்களுக்குச் செய்தது என்ன?
என்ற நூல். தலித் எழில்மலை மொழிபெயர்ப்பு பக்கம் 254.

இந்த கோல்வாக்கரையும்; திலகரையும் குருநாதர்களாக ஏற்றுக்கொண்ட பிஜேபி தனது கட்சியில் எஸ்சி எஸ்டி பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகம் இருப்பதாகக் கூறுவதனால் இந்தக்கருத்துக்கள் எல்லாம் தவறு என்று சொல்லி விடுமா? ஓரு சிலர் தங்கள் சுயநலத்துக்காக இவர்கள் போடும் எலும்புத்துண்டுகளுக்காக இவர்கள் பின்னால் செல்வதனால் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கு என்ன நன்மை?.
எனவே. பிஜேபி என்பது பிராமின் ஜனதாப் பார்ட்டிதான் என்பதில் எவ்வித அய்யமுமில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக