புதன், 9 நவம்பர், 2016

இந்து சனாதன தர்மத்தைக் காக்கப் புறப்பட்ட பிஜேபி யினர் இன்று சமநீதி கேட்டுப் போராடுகின்றார்களாம்


சமூகநீதியின் தாய்வீடு தமிழ்நாடு. அனைத்து வகுப்பைச் சேர்ந்த மக்களுக்கும் அந்தந்த வகுப்பு எண்ணிக்கைக்கேற்ப வகுப்புவாரி உரிமை வரவேண்டும் என்று முழங்கியது திராவிடர் இயக்கம். தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போது ஒவ்வொரு மாநாட்டிலும் இதற்காகக் குரல் கொடுத்தார்கள்.

காங்கிரசிலிருந்த இந்து சனாதனிகள் அதனை ஒப்புக் கொள்ளாத காரணத்தால் காங்கிரசை விட்டே வெளியேறினார் பெரியார். சேரன்மாதேவியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக நடத்தப்பட்ட குருகுலத்தில் பார்ப்பனப்பிள்ளைகளுக்கு சுடச்சுட இட்டிலி, உப்புமா, பொங்கல் வழங்கியும் பார்ப்பனரல்லாத பிள்ளைகளுக்கு பழைய சோறும், தனித்தனித் தண்ணீர்ப்பானை என்ற நடைமுறையை உருவாக்கியவர் இந்து சனாதனியான வ.வெ.சு அய்யர். அதை எதிர்த்து தந்தை பெரியார் குரல்கொடுத்தும் இந்து சனாதன தர்மத்தில் அதற்கு இடமில்லை என்று அதை ஏற்க மறுத்தார் வ.வெ.சு அய்யர்.

இந்து சனாதன தர்மம் என்பது சமநீதியை அங்கீகரிக்காதது. சமூக நீதியை ஏற்காதது. சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்றது. படித்தால் நாக்கை அறு என்றது. படிப்பதை காதிலே கேட்டால் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்றது. திருமலை நாயக்கர் காலத்தில் (400 ஆண்டுகளுக்கு முன்னால்) மதுரை வேத பாடசாலையில் பத்தாயிரம்பேர் படித்தார்கள். அவர்கள் அனைவருமே பார்ப்பனர்கள். அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் அதுதான் நிலை.

வெள்ளைக் காரன் காலத்தில் 1925 வரை மருத்துவக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்றால் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. பார்ப்பான் மட்டும்தான் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதை மறைமுகமாகக் கூறுவதுதான் இது. அதை மாற்றியது தந்தை பெரியார் ஆதரவு பெற்ற நீதிக்கட்சி அரசு.
திராவிட இயக்கமும்ää தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் சமூகநீதிக்குக் குரல் கொடுத்தபோதெல்லாம் அதை எதிர்த்தவர்கள் இந்து சனாதனிகள். ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கல்வியா? காலையில் பள்ளியில் படி. மாலையில் அப்பன் தொழிலைச் செய் என்றார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடா? தகுதி போகும் திறமை போகும் என்றார்கள். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடா? கூடவே கூடாது என்றார்கள்.

அத்தகைய இந்து சனாதன தர்மத்தைக் காக்கப் புறப்பட்ட பிஜேபி யினர் இன்று சமநீதி கேட்டுப் போராடுகின்றார்களாம். இது யாரை ஏமாற்ற?

தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் தமிழ்நாட்டில் நீண்ட நெடுங்காலமாக கல்வி உதவித்தொகை பெற்று முன்னேறி வருகிறார்கள். மருத்துவக் கல்லூரியில் முதல் பத்து இடங்களில் அனைவருமே பார்ப்பனர்களால் தகுதி இல்லை திறமை இல்லை என்று இழிவு படுத்தப்பட்ட தாழ்த்தப்;பட்ட – பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்தான். தகுதி – திறமை தனக்கு மட்டுமே சொந்தம் என்று ஏமாற்றிய ஒரு பார்ப்பான்கூட அதில் இல்லை. அரசு உதவி இல்லாமல் இது சாத்தியமா? பட்டதாரியே இல்லாமல் முதல் தலைமுறையாகப் படிக்க வரும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.  கல்லூரிவரை படிக்கும் அனைவருக்கும் இலவசப் பேருந்துப்பயணம்.

இன்னும் பல்வேறு சலுகைகளை தமிழக அரசு தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கும்போது இந்து மாணவர்களுக்கு சலுகை கேட்டு பிஜேபி போராடுவதாக பாவ்லா செய்வது அமைதிப்பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் வகுப்புக் கலவரத்தைத் தூண்டவே.
மசூதியை இடிப்பதையும், சர்ச்சுகளைக் கொளுத்துவதையும் பாதிரியாரை எரிப்பதையும், கன்னியாஸ்திரிகளைக் கற்பழிப்பதையும் வாடிக்கையாகக் கொண்ட பாஜக இந்துவெறியர்கள் இன்று வட மாநிலங்களில் மாலேகான் குண்டுவெடிப்பு, போலி என்கவுண்டர் என்று பல்வேறு நிலைகளில் அம்பலப்பட்டுப்போன நிலையில் அதை மறைக்கவே இன்று தமிழகத்தில் உத்தமர் வேடம் போட இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறார்கள். அவர்கள் நோக்கம் அனைவருக்கும் கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதல்ல. மதக்கலவரத்தைத் தூண்டுவதே. தமிழர்கள் அனைவரும் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதுமிகமிகஅவசியம்.              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக