செவ்வாய், 29 நவம்பர், 2016

சமச்சீர் கல்வியை ஒழித்து விட்டு எல்லோரும் CBSE க்கு மாறிவிட்டால் எல்லோருக்கும் IIT,IIM,AIMS நிறுவனங்களில் இடம் கிடைக்குமா?



ஒரு காலத்தில் கல்வி என்பது வேத இதிகாச புராணங்கள் மட்டும்தான். அந்தக் கல்வி என்பது பார்ப்பனரல்லாத யாருக்கும் தரப்படவில்லை.

 சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே. சூத்திரன் படித்தால் நாக்கை அறு. காதில் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று. நெஞ்சில் தேக்கி வைத்திருந்தால் நெஞ்சைப்பிள என்ற காட்டுமிராண்டித்தனமான சட்டத்தைப் போட்டிருந்தார்கள். பார்ப்பனருக்கு மட்டுமே கல்வி வழங்கப்பட்டது.

 ராஜேந்திர சோழன் காலத்திலே எண்ணாயிரம் என்ற கிராமத்தில் சமஸ்கிருதப் பாடசாலையில் ஆயிரக்கணக்கான பார்ப்பனர்கள் படிக்க வசதி செய்து தரப்பட்டது. அதற்காக ஆயிரக்கணக்கான வேலி நிலங்களை ராசேந்திர சோழன் பார்ப்பனர்களுக்கு வழங்கியிருந்தான். அதனால்தான் அவனது ஆயிரமாவது பதவியேற்பு ஆண்டுவிழாவை RSS தமிழ்நாட்டில் கொண்டாடியது.

சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கன் பத்தாயிரம் பேர் படிக்க சமஸ்கிருதப்பாடசாலை அமைத்தான்.

அதில் பார்ப்பனர் மட்டுமே படித்து வந்தனர். அவனது ஆட்சிக் காலத்தில் ஒரு சூத்திரன் வேதத்துக்குப் பொருள் கேட்டான் என்பதால் அவனது ஆசனவாயில் பழுக்கக் காய்ச்சின இரும்பைச் சொருகி சூத்திரன் வேதத்துக்குப் பொருள் கேட்டால் அதற்கு இதுதான் பொருள் என்றான் மன்னனின் தலைமை ஆலோசகன்.

இப்படிக் கல்வி மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்விக் கண்ணைக் கொடுத்தவர் காமராசர். அதன்மூலம் ஓரளவு தமிழன் கல்வி அறிவு பெற்றாலும் தமிழகத்தில் பல்வேறு கல்வி முறைகள் இருந்தன. CBSE, Anglo indian, Matriculation,  Secondary Board என்று பல்வேறு பாடத்திட்டத்தால் கல்வியில் ஏற்றத்தாழ்வு நிலவியது. அதனை மாற்றியமைத்து எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வி முறையைக் கொண்டுவந்து சமமான சீரான கல்வித் திட்டத்தை கலைஞர் அரசு கொண்டு வந்தது. அதனால் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட இனத்துப் பிள்ளைகள் பலரும் பயன்பெற்றார்கள். மருத்துவக் கல்லூரியிலும், பொறியியல் கல்லூரியிலும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்துப் பிள்ளைகள் ஏராளமான அளவில் சேர்ந்தார்கள்.

எல்லோருக்கும் கல்வி கொடுப்பதை ஏற்காதவர்கள் பார்ப்பனர்கள். அனைவரும் சமமாக இருப்பதையும் ஏற்காதவர்கள் அவர்கள். மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற விதிமுறையைப் புகுத்தி பார்ப்பனர் மட்டுமே ஆக்கிரமித்திருந்த மருத்துவக் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் நுழைவதா? என்ற ஆத்திரத்தில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் அதனைப் பயன்படுத்தி சமச்சீர் கல்வியை ஒழிக்கப் பார்த்தார்கள்.

நீதிமன்றம் சென்றும் மூக்குடைபட்டு சமச்சீர் பாடத்திட்டம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டதால் வேறு வழியில்லாமல் இன்று நாடு முழுவதும் சமச்சீர் பாடத்திட்டம் நடைமுறையில் இருக்கிறது.

இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆர்எஸ்எஸ் கும்பல் பெல் நிறுவனத்திலும் சமச்சீர் கல்வித் திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்கிறது. எல்லோரையும் CBSE பாடத்திட்டத்தில் சேர்ந்து படிக்கச் சொல்கிறது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் தமிழ் படிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தி படித்தால் வடநாட்டில் வேலைகிடைக்கும் என்று இந்தியைப் படிக்கச் சொல்கிறார்கள். இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால் வடநாட்டுக்காரனெல்லாம் ஏன் தமிழ்நாட்டில் வந்து பானிபூரி விற்கிறான் என்றால் அதற்கு எவனும் பதில் சொல்வதில்லை.

தமிழில் வணக்கம் என்பதுகூட மறைந்து நமஸ்காரம்ஜி என்று பேச ஆரம்பித்து விட்டான்கள். அண்ணா, தம்பி, மாமா, மச்சான் என்று உறவுமுறை சொல்லி அழைத்த தமிழன் வயதில் மூத்தவர்களை அய்யா என்று அழைத்தான். அதையெல்லாம் அழித்து விட்டு இப்பொழுது யாரைப் பார்த்தாலும் ஜி போட ஆரம்பித்து விட்டான்.

இந்த இலட்சணத்தில் சமச்சீர் கல்வியை ஒழித்து விட்டு எல்லோரும் CBSE க்கு மாறிவிட்டால் எல்லோருக்கும் IIT,IIM,AIMS நிறுவனங்களில் இடம் கிடைக்குமா? மிகவும் தகுதி திறமையோடு படித்து வந்த ரோஹித் வெமுலா போன்ற மாணவர்களையே படாதபாடு படுத்தி தற்கொலை செய்ய வைக்கிறது காவிக்கும்பல். IIT யில் பயிலும் தாழ்த்தப்பட்ட மாணவர் பலர் தற்கொலை செய்துகொண்டு சாகின்றனர்.

இந்நிலையில் சமச்சீர் கல்வியை ஒழித்துவிட்டு CBSE க்கு மாற்றச் சொல்ல BMS; க்கு அதிகாரத்தைக் கொடுத்தது யார்? MATRICULATION பள்ளியை CBSE க்கு மாற்றச் சொல்லும் BMS; பாய்லர் பிளான்ட் பெண்கள் மற்றும் ஆண்கள் பள்ளியையும் இராமகிருஷ்ணா பள்ளியையும் CBSE க்கு; மாற்றச் சொல்லிக் கேட்கவில்லையே ஏன்?  சாமியார்கள் கோபித்துக்கொள்வார்கள் என்பதாலா? பங்குபெறும் சங்கமாக ஆவதற்கு முன்பே இப்படிப்பட்ட நிலையை எடுக்கிறதென்றால் பங்குபெறும் சங்கமானால் தமிழர்களை முழுக்க வடநாட்டானுக்கும் பார்ப்பானுக்கும் அடிமைப்படுத்த மாட்டார்களா? தோழர்களே! எச்சரிக்கை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக