திங்கள், 14 நவம்பர், 2016

ஒருவருக்கொருவர் அந்நியராக மட்டுமல்ல எதிரியாகவும் சித்தரித்தது இந்துமதம்தானே!



காந்தியைக் கொன்ற கோட்ஷேவை தேசபக்தர் என்பார்களாம். கோட்ஷேவுக்கு சிலை வைப்பார்களாம். கோயிலும் கட்டுவார்களாம். அதனை எதிர்த்து கருத்தரங்கம் நடத்தினால் நிர்வாகத்தை மிரட்டி நடத்த அனுமதிக்கக் கூடாது என்பார்களாம். நிர்வாகமும் அதற்குப் பணியுமாம். அந்தக் கருத்தரங்கத்திற்குத் தலைப்பு மதவெறி எதிர்ப்புக் கருத்தரங்கம். அது இந்துமதத்துக்கு எதிரானதாம். மதவெறிதான் இந்துமதம் என்றால் அந்த வெறியை ஒழிப்பதில் என்ன தவறு?

இந்துமதத்தைப் பற்றி மட்டும் பேசுகிறோமாம். கிறிஸ்துவ மதத்தையோ இஸ்லாம் மதத்தையோ பேசுவதில்லையாம். அதனால் நாம் இந்துக்களுக்கு எதிரானவர்களாம். முதலில் இந்து என்றால் யார்? பார்ப்பான் எல்லோரையும் சமமாக மதிக்கிறானா? முதலியாரை பார்ப்பான் மதிக்கிறானா? பிள்ளைமாரை சமமாக ஏற்றுக் கொள்கிறானா? செட்டியாரை அர்ச்சகராக வர சம்மதிப்பானா? கவுண்டரை, கள்ளரை, வன்னியரை. முத்தரையரை. நாயக்கரை சமமாக பார்ப்பான் மதிக்கிறானா?

இந்தப் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிக்காரர் படிப்பதற்கு பார்ப்பான் சம்மதித்தானா? இவர்களை சூத்திரன் என்று சாஸ்திரத்தில் எழுதி வைத்தது யார்? சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று சாஸ்திரத்தில் எழுதி வைத்தது யார்? இந்தப் பிற்படுத்தப்பட்ட ஜாதிக்கு மண்டல் கமிஷன் அடிப்படையில் 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கியதை எத்தனை பார்ப்பான் ஒத்துக் கொண்டான்? இவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் தகுதி போச்சு திறமை போச்சு என்று கூச்சல் போட்டவன் யார்? இவனும் இந்துதானே? இவனை எதிர்த்துக் கூச்சல் போட்ட பார்ப்பானும் இந்துதானே?

முதலியார் வீட்டில் பார்ப்பான் பெண் எடுப்பானா? வெள்ளாளர் வீட்டில் முதலியார் சம்மந்தம் போடுவாரா? நாயுடு வீட்டுப் பெண்ணை கவுண்டர் கல்யாணம் செய்வாரா? வன்னியர் வீட்டில் முத்தரையர் பெண் கொடுத்து எடுப்பாரா? ஆக. பார்ப்பானுக்கு முதலியார் அந்நியர்தானே? முதலியாருக்கு செட்டியார் அந்நியர்தானே? கவுண்டருக்கு கள்ளர் அந்நியர்தானே? பள்ளருக்கு பறையர் அந்நியர்தானே? பறையருக்கு சக்கிலியர் அந்நியர்தானே? இப்படி ஒருவருக்கொருவர் அந்நியராக மட்டுமல்ல எதிரியாகவும் சித்தரித்தது இந்துமதம்தானே! இப்படிப் பிரித்து வைத்த நீங்களா இந்து ஒற்றுமை பேசுவது? இதுநாள்வரையிலும் அது நீடிப்பது ஏன்? பார்ப்பானைத் தவிர மற்ற யாருக்கும் அர்ச்சகராக உரிமை மறுக்கப்படுவது ஏன்? மதசடங்கு நடத்த பார்ப்பனரல்லாதாருக்கு சாஸ்திரத்தில் அனுமதி உண்டா?

ஒரு இந்துவை இன்னொரு இந்து பார்த்த உடன் கட்டிப் பிடிக்கிறானா? கைகுலுக்குகிறானா? இவன் என்ன ஜாதியாக இருப்பானோ என்ற அடுத்த வினா எழுகிறதா? இல்லையா? எந்தப் பார்ப்பானாவது கீழ்ஜாதிக் காரனுக்கு நமஸ்காரம் செய்கிறானா? சமமான ஜாதியோடுதான் நமஸ்காரம் என்பான். கீழ்ஜாதிக்காரன் கும்பிடுறேன் சாமி என்றுதானே உன் இந்து மதத்தில் சொல்ல வேண்டும்? தொட்டால் தீட்டு. பார்த்தால் பாவம். நிழல் பட்டால் தோஷம் என்று சொன்னது எந்த மதம்? ஆடு மாடு பன்றி நடக்கும் வீதிகளில் ஆறறிவுள்ள மனிதனை நடக்க விடாமல் செய்தது எந்த மதம்? பார்ப்பானைத் தவிர மற்ற எல்லோரும் கீழ்ஜாதிதானே?

ஒவ்வொருவனும் தனக்குக் கீழே எத்தனை ஜாதிகள் என்று கணக்குப் போட்டு தன் ஜாதிக்காரனைத் தவிர மற்ற எல்லோரையும் அந்நியனாகப் பார்க்க வைத்தது இந்து மதம்தானே?

ஒருவன் இஸ்லாம் மதத்தில் சேர்ந்தால் அவன் முல்லாவாகத் தகுதி இருக்கிறது. கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தால் பாதிரியாக உரிமை இருக்கு. பிற மதத்திற்குச் சென்றவன் உன் மதத்திற்கு திரும்பி வந்தால் அவனை பார்ப்பானாக ஏற்றுக்கொண்டு அர்ச்சகனாக நியமிப்பாயா? சீரங்கத்திலும் திருப்பதியிலும் மணியடிக்கும் உரிமை கிடைக்குமா? குறைந்தபட்சம் அங்கே கோயில் பிரசாதம் செய்யும் வேலைக்காவது அனுமதிப்பாயா? சங்கர மடத்தில் சமையல் செய்யும் வேலையாவது கிடைக்குமா?

இவையெல்லாம் மறுக்கப்படுவது ஏன்? எங்கள் மக்களை சூத்திரன் என்று உன்னுடைய சாஸ்திரங்கள் சொல்லுவதால்தானே? சூத்திரன் என்றால் பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்று உன் மனுதர்மம் சொல்லுகிறதா? இல்லையா? இவையெல்லாம் இழிவு இல்லையா? எங்கே இழிவு இருக்கிறதோ அதனை எதிர்த்துப் போராடுவதுதானே சுயமரியாதை உள்ளவன் செயல்? நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ இந்து மதத்தில் பிறந்துவிட்டோம். அதற்காக அந்த இழிவுகளைச் சுமந்துதான் ஆக வேண்டுமா? எங்கள் இழிவுகளைத் துடைக்கப் போராடுவது இந்துமதத்திற்கு எதிரானது என்றால் அந்தக் காரியத்தைத் தொடர்ந்து செய்வோம். உன் கொட்டத்தை அடக்குவோம்.

எனவேää தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சகோதரர்களே! இந்து முன்னணி என்பது பார்ப்பன முன்னணிதான். ஜாதியைப் பாதுகாத்து பார்ப்பான் கையில் நாட்டை ஒப்படைக்கத்தான் RSS என்ற அமைப்பே துவக்கப்பட்டது. அதனுடைய கிளைகள்தான் இந்து முன்னணி. BJP,BMS,VHP எல்லாமே! எனவே. அதிலிருந்து அனைவரும் வெளியேறுவீர்! சுயமரியாதை பெறுவீர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக