ஞாயிறு, 13 நவம்பர், 2016

தொழிலாளர்கள் மத்தியில் தேவையற்ற ஜாதிய உணர்வுகள்



நம் நிறுவனத்தில் பணியின்போது ஏற்பட்ட கொடூரமான விபத்தில் உயிரிழந்த சுந்தரப் பெருமாள் ஆரோக்கியசாமி ஆகிய இருவருடைய இழப்பும் ஈடுசெய்ய முடியாத இழப்புக்கள். அவர்கள் இருவருக்கும் பெல் தி.தொ.க வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த இறப்புக்களுக்கு அவர்கள் துறை அதிகாரிகளே காரணம் என நினைக்கும் தொழிலாளர்களின் கோபத்திலும் நியாயம் இல்லாமல் இல்லைää அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட இனத்தவர்களாக இருப்பதால் அந்த இனத்தைச் சேர்ந்த ஜாதிசங்கம் அதைக் குறைகூறுகிறது. இவரை ஏன் விட்டுவிட்டீர்கள்? அவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை? என அவர்கள் கேட்பதிலும் நியாயம் இல்லாமல் இல்லை, இதனால் விரும்பத்தகாத விளைவுகள் நேரிடலாம்.

நம் நிறுவனத்தில் ஆரம்ப காலத்தில் அங்கிங்கெனாதபடி அனைத்து உயர் பதவிகளிலும் பார்ப்பன உயர்ஜாதியினரின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கும். உற்பத்தித்துறையிலும் அவாளின் ஆதிக்கமே! அவர்களது ஆதிக்கத்தை மீறி யாரும் மேலே வந்துவிட முடியாது. அப்பொழுது திராவிடர் தொழிலாளர் கழகம் அந்த ஆதிக்கத்தைப் பட்டியலிட்டு விடுதலையில் எழுதியது. அதன் பிறகு தொழிலாளர்களுக்கு நேரடியாகத் தொடர்புடைய பதவிகளில் பார்ப்பனரல்லாதார் அமர்த்தப்பட்டனர். தொழிலாளர்கள் ஆங்காங்கே சில மனக் கசப்புகள் இருந்தாலும் அதிக பாதிப்பின்றி ஓரளவு நிம்மதியுடன் பணியாற்றினர்.

அப்பொழுதும் விபத்துக்கள் நடந்தன. அதிகாரிகளின் நிர்ப்பந்தத்தால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. பழைய நிகழ்வு ஒன்று. கட்டிட எண் 50ல் பணிபுரிந்த ஏசு நேசய்யா என்ற தொழிலாளி; 1994ல் ஒரு விபத்தில் மாண்டு போனார். அந்த விபத்துக்கு முழுக்க முழுக்க சூப்பர்வைசரின் முட்டாள்தனம் தான் காரணம். அந்த விபத்தில் அந்த சூப்பர்வைசர் தப்பி விட்டார் தப்பிய அவரிடம் அனைவரும் போய் ~நீங்கள் தெய்வாதீனமாப் பொழச்சுக்கிட்டீங்க சார்| என்று கூறி அவரை தடவிக்கொடுக்கிற வேலையைச் செய்தார்களே தவிர ஏனய்யா இப்படி முட்டாள்தனமாக பாதுகாப்பில்லாமல் வேலை செய்ய வைத்து ஒரு தொழிலாளியின் சாவுக்குக் காரணமாயிட்டியே! என்று யாரும் கூறவில்லை. அவர்மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லிக் கோரவில்லை. காரணம் அவர் முதுகில் தொங்கிய மூணேமுக்கால் அடிக்கயிறு.

இன்றைக்கு ஏராளமான பொறியாளர்களும் சூப்பர்வைசர்களும் புதிது புதிதாக எடுக்கப்படுகிறார்கள். மலையாளிகள், வடநாட்டார்ää பார்ப்பனர் என எடுக்கப்படும் அவர்களில் எத்தனை பேர் தொழிலாளர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய உற்பத்தித் துறையில் நியமிக்கப்படுகிறார்கள்? அவர்களெல்லாம் சொகுசாக ஏசி அறைகளிலும் சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத இடங்களிலும் பணியமர்த்தப் படுகிறார்கள்.

பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள்தான் மாசடைந்த உற்பத்தித்துறையில் தொழிலாளரோடு உற்பத்தி குறித்து சண்டைபோடக் கூடிய இடத்தில் இருக்கிறார்கள். பழைய காலத்தில் எப்படி ஆதிக்கவாதிகள் உல்லாச வாழ்வு வாழ்வதற்காக உழைக்கும் மக்களுக்குள் மோத விட்டு வேடிக்கை பார்த்தார்களோ, அதுபோல இப்பொழுதும் பிற்படுத்தப்பட்டவர்களும்- தாழ்த்தப்பட்டவர்களும் மோதிக்கொள்ளும் சூழல் உருவாகிறது. தாழ்த்தப்பட்டவர் உயர் அதிகாரியாக இருக்கும் இடத்தில் நாங்கள் வேலை செய்ய முடியாது என்றும் பிற்படுத்தப்பட்டவர்தான் இதற்குக் காரணமானவர் என்றும் சர்ச்சைகள் தேவையற்று உருவாகிறது. இதே போல் பார்ப்பனரோ, வடநாட்டாரோ உயர் அதிகாரியாக இருந்தால் இந்த சர்ச்சை எழ வாய்ப்பிருக்கிறதா?
இட ஒதுக்கீட்டினை ஏமாற்றி பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட இருவருக்கும் கிடைக்கக் கூடிய இடங்களையும் உயர்ஜாதியினரே அனுபவிக்கும் வகையில் இன்னமும் பெல் நிர்வாகம் வஞ்சித்து வருகிறது. தாழ்த்தப்பட்ட ஒருவர் இன்னமும் ஒரு நிர்வாக இயக்குனராக வர முடியவில்லை. தீனதயாளு, சீனிவாசுலுவைத் தவிர வேறொரு பிற்படுத்தப்பட்டவர் நிர்வாக இயக்குனராக வர இயலவில்லை. இந்நிலையில் இரு பிரிவினரும் ஒன்றிணைந்து நிர்வாகத்திடம் உரிமையைப் பெறப் போராட வேண்டியவர்கள்ää மனக் கசப்பை வளர்த்துக் கொள்ளலாமா?

இளம் தொழிலாளர்கள் மத்தியில் தேவையற்ற ஜாதிய உணர்வுகள் உருவாவதும் தூண்டப்படுவதும் தவிர்க்கப்பட வேண்டாமா? இளம் தொழிலாளர்கள் இத்தகைய சக்திகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக