புதன், 23 நவம்பர், 2016

நந்தன். -காத்தவராயன்



வரலாற்றில் ஆரியர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த பல படுகொலைகளைச் செய்து விட்டு தங்களுக்கு எதுவுமே தெரியாதது போலவும் எல்லாம் பகவான் ஆணைப்படி நடப்பதாகவும் கதைகட்டி விட்டுள்ளார்கள்.

1200 ஆண்டுகளுக்கு முன்னால் நந்தனைத் தீயில் இறங்கச் செய்து பொசுக்கிக் கொன்று விட்டு அவன் ஜோதியில் அய்க்கியமாகி விட்டான் என்றார்கள். என்ன காரணம்? கோயில் என்பது பார்ப்பனரின் தனிச்சொத்து என்பது போலவும் பார்ப்பனர் அல்லாதார் கோயிலுக்குள் நுழையவோ கருவறை வரை செல்லவோ கூடவே கூடாது என்ற நிலையை உருவாக்கி வைத்திருந்தார்கள். இந்த இந்த ஜாதிக்காரன் இன்ன இன்ன இடத்தில் நின்றுதான் கடவுளை தரிசனம் செய்ய வேண்டும் என்று விதியை வைத்திருந்தார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்கு அருகிலேயே வரக்கூடாது. அவர்கள் கோபுரம் எவ்வளவு தொலைவில் இருந்து பார்த்தால் கண்ணுக்குத் தெரிகிறதோ அவ்வளவு தொலைவில் இருந்துதான் தரிசனம் செய்ய வேண்டும் என்றார்கள். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று எழுதி வைத்துள்ளார்கள்.

அதையும் மீறி அந்த நாளிலேயே கோயிலில் நுழைய வேண்டும் என்று போராடி அதற்கான முயற்சிகளை எடுத்து வந்தவன் நந்தன். அவனது முயற்சிகளைப் பல வழிகளிலும் முறியடித்த பார்ப்பனக் கூட்டம் அவனது மன உறுதிக்குப் பின்னால் தோற்றுப் போனது. மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ள நந்தனை எதுவும் செய்ய முடியவில்லை. சூழ்ச்சியாக கடவுளே கனவில் வந்து சொன்னார். நெருப்பில் இறங்கி வா! என்று நெருப்பு மூட்டி நந்தனை அதில் இறங்கச் செய்து அவனைக் கொன்று விட்டார்கள். அதனை எதிர்த்து மக்கள் கிளர்ந்து எழுந்து விடக் கூடாது என்பதற்காக அவர் கடவுளுடன் அய்க்கியமாகி விட்டார் என்று கதைகட்டி மக்களை நம்பச் செய்துவிட்டார்கள் கொலைகாரர்கள்.

அதே போல நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவன் காத்தவராயன் என்பவன். நாயக்கர் ஆட்சி நடைபெற்ற காலம். மனுதர்மம் கோலோச்சி மக்களை மடையர்களாக ஆக்கி அடிமைப்படுத்திய காட்டுமிராண்டிக் காலம். அந்த மனுதர்மத்தின்படி பிராமணப் பெண்ணை எந்த கீழ்ஜாதி ஆடவனாவது மணம் முடித்தாலோ உறவு கொண்டாலோ அவர்கள் உயிர்போகும்வரை அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று மனுதர்மம் சொல்கிறது.

காத்தவராயன் சிறந்த கலைஞன். தியாகராஜபாகவதரைப் போன்ற கலைஞானம் கொண்டவன். அவனது பாடலுக்கு மயங்காதவர்களே கிடையாது. ஆரியமாலா என்ற பார்ப்பனப் பெண் அவனது இசைக்கு மயங்கி அவனை விரும்பித் திருமணம் செய்துகொள்கிறாள். இதனை அனுமதித்தால் வருணாசிரமம் கெட்டுவிடும். மற்ற கீழ்ஜாதிக்காரனுக்கெல்லாம் துணிவு வந்து மேல்ஜாதிப் பெண்ணைக் கல்யாணம் செய்து வரணாசிரமத்தைக் கெடுத்து விடுவார்கள் என்று கூறி பார்ப்பனர்கள் முட்டாளாக இருந்த மன்னனைப் பயன்படுத்தி காத்தவராயனைப் பிடித்து வந்து அறுபது அடி கழு மரத்தில் தூண்டிலைக் கட்டி காத்தவராயனது குரல்வளையில் அதனை மாட்டி அன்ன ஆகாரம் எதுவும் இல்லாமல் ஊரார் மத்தியிலே தூக்கிலே தொங்க விட்டுப் படுகொலை செய்தார்கள்.

அதனால் மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என்பதால் மக்கள் மனதை திசை திருப்ப காத்தவராயன் சிவபெருமானத மகன் என்றும் அவனுக்கு சென்ற பிறவியில் உள்ள சாப விமோசனம் போக வேண்டும் என்பதற்காக அவன் தூக்கில் தொங்கினான். இறந்தபிறகு சிவலோகம் சென்று விட்டான் என்று கதை கட்டி படுகொலையை மூடி மறைத்தார்கள் பார்ப்பனர்கள்.

அதுபோல இன்று காந்தியை எந்தக் கூட்டம் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாக்கியதோää டெல்லியிலே காமராசர் தங்கியிருந்த வீட்டுக்கு பட்டப்பகலில் அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது தீவைத்துக் கொலை செய்ய முயன்றதோ அந்தக் கூட்டம் இன்று அவர்களைப் பாராட்டுவதுபோல் கதை எழுதுகிறது. எல்லாப் புகழும் தேசத்திற்கே என்று வாழ்ந்தவர்கள் என்று துண்டறிக்கை ஒட்டி தங்களது கடந்த கால வன்செயல்களை எல்லாம் மூடி மறைக்கப் பார்க்கிறது. காந்தியைப் பாராட்டுபவர்களாக அவர்கள் இருந்தால் காந்தி பிறந்த குஜராத்தில் அவருக்கு சிலை வைக்காமல் வல்லபாய் பட்டேலுக்கு ஏன் சிலை வைக்க வேண்டும்? காந்தியையும் காமராசரையும் பாராட்டுவதுபோல் எழுதுவது பேசுவது எல்லாம் வெளி வேஷமே. உள்ளுக்குள் மறைந்திருப்பது காவி துவேஷமே என்பதை தொழிலாளர்கள் புரிந்துகொண்டு அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்! அவசியம்!! அவசியம்!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக