புதன், 30 நவம்பர், 2016

டியூசன் வாத்தியார் தன்னிடம் பயின்ற மாணவன் வேலைக்குப் போனால் உன் சம்பளத்தையெல்லாம் என்னிடம்தான் தர வேண்டும் என்று சொன்னால் எவ்வளவு அயோக்கியத் தனமானதோ அதைவிட மோசமானது பிஎம்எஸ் ஸின் செயல்.


நமது அர்த்தமுள்ள(?) இந்து மதத்தில் ஒருவனுடைய ஜாதி பிறப்பதற்கு முன்பே தீர்மானிக்கப்படுகிறது. கேட்டால் பிர்மா உன் தலையில் அப்படி எழுதி விட்டார் என்று கதைவிட்டார்கள். அந்த நபர் தான் வளர்ந்த பிறகு தன்னுடைய அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் ஏற்ற வகையில் வேறு ஒரு மதத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள இந்த நாட்டு சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் தன்னுடைய ஜாதியை மாற்றிக் கொள்ள இந்துமதம் அனுமதிப்பதில்லை. தோட்டியின் மகன் தோட்டியாகவே சாகவேண்டும். தீண்டத்தகாதவன் எல்லாக் கொடுமைகளையும் அனுபவித்து விட்டு தீண்டத்தகாதவனாகவே சாக வேண்டும். பார்ப்பான் மட்டும் உலகிலுள்ள எல்லா சுகபோகங்களையும் அனுபவித்து விட்டு பார்ப்பானாகவே சாக வேண்டும் என்கிறது இந்து மதம்.

அதே போல இந்த நிறுவனத்தில் வேலைக்கு வருவதற்கு முன்பே ஒரு தொழிலாளிக்கு தொழிற்சங்கமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அப்படி நிர்ணயம் செய்பவர்கள் பிஎம்எஸ் காரர்கள். இந்த நிறுவனத்தில் ஒரே ஒருமுறை தொழிலாளர்கள் ஏமாந்து ஓட்டுப்போட்டாலும் அடுத்தடுத்த தேர்தல்களில் பிஎம்எஸ் சுக்கு இங்கு இடமில்லை என்று ஓடஓட விரட்டியடித்தார்கள்.

தங்களைப்பற்றியும் தங்கள் கொள்கைகளையும் வெளிப்படையாக எடுத்துச்சொல்லி தொழிலாளர்களைத் தங்கள் சங்கத்தில் சேர்க்க முடியாது என்பதைத் தெரிந்துகொண்ட பிஎம்எஸ் ஒரு குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்தது. அதுதான் ஆர்டிசான் பயிற்சி வகுப்பு. இங்கே பல சங்கங்களும் அந்தப் பயிற்சி வகுப்பை நடத்தினாலும் வேலைக்குச் சேர்ந்த பிறகு எங்கள் சங்கத்தில்தான் சேர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதில்லை.

ஆனால் பிஎம்எஸ் மட்டும் பயிற்சியில் சேரும்போதே ஏற்கனவே பிஎம்எஸ் ஸில் இருக்கும் நபர் சிபாரிசு செய்ய வேண்டும் என்றும்ää தேர்வில் வெற்றி பெற்று தேர்வு ஆனால் பிஎம்எஸ்ஸில்தான் உறுப்பினராகச் சேரவேண்டும் என்றும் உறுதிமொழி எழுதி வாங்கிக் கொள்கிறது.

அத்துடன் ஆர்எஸ்எஸ் சாகாக்களில் செய்வதுபோல் அவர்களை மூளைச்சலவை செய்து சத்தியம் வாங்கிக் கொள்கிறது. அவர் வேலைக்கு வந்த உடனேயே அவரை அணுகி உறுப்பினர் படிவத்தை நீட்டி கையெழுத்து வாங்கி விடுகிறார்கள். அவர்கள் தயங்கினால் அவர்களை மிரட்டி நாங்கள் நினைத்தால் உன்னுடைய ஆர்டரையே நிறுத்தி விடுவோம். பெர்சனலில் எங்களுக்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்று பிளாக் மெயில் செய்து அவர்களை உறுப்பினராக்குகிறார்கள்.

இது கடைந்தெடுத்த ஏமாற்று வேலையாகும். இவர்கள் பயிற்சி அளிப்பது பணம் வாங்கிக் கொண்டுதானே தவிர யாருக்கும் இலவச பயிற்சி அளிப்பதில்லை. அது ஒரு டியூசன் வாத்தியார் பணிதான். டியூசன் வாத்தியார் தன்னிடம் பயின்ற மாணவன் வேலைக்குப் போனால் உன் சம்பளத்தையெல்லாம் என்னிடம்தான் தர வேண்டும் என்று சொன்னால் எவ்வளவு அயோக்கியத் தனமானதோ அதைவிட  மோசமானது பிஎம்எஸ் ஸின் செயல்.

எனவே, பிஎம்எஸ்இனிமேல் இதுபோன்ற பிளாக் மெயில் வேலையை நிறுத்திக் கொள்ள வேண்டும். அல்லது நிர்வாகம் இதுபோன்ற பயிற்சி வகுப்பினை நடத்துவதற்கு அவர்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது.  புதிய ஊழியர்களே! பிஎம்எஸ் ஸின் மிரட்டலுக்குப் பணியாதீர்! அவர்கள் தொழிலாளர்களுக்காக தொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொழிலாளர்களால் நடத்தப் படுகிற சங்கம் என்று சொல்வது பொய்.

அந்த சங்கத்தை ஆரம்பித்த திரு. தெங்கடி ஒரு ஆர்எஸ்எஸ் காரர். அவர் எந்த தொழிற்சாலையிலும் வேலைபார்த்த தொழிலாளி அல்ல. அதை வழிநடத்தும் தலைவர்கள் ஓ.பி. அஹி, எம்.என்.ஜா போன்றோரும் ஆர்எஸ்எஸ் காரர்களே! ஆர்எஸ்எஸ் ஸால் ஆரம்பிக்கப்பட்டு ஆர்எஸ்எஸ் கொள்கையைப் பரப்புவதற்காக ஆர்எஸ்எஸ் காரர்களால் நடத்தப்படுகிற சங்கம்தான் பிஎம்எஸ். நாட்டில் மூன்றுமுறை தடைசெய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் சின் சங்கத்தில் சேர்ந்து உங்கள் வாழ்வைப் பாழாக்கிக் கொள்ளாதீர்!    :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக