திங்கள், 28 நவம்பர், 2016

மே தினம் தொழிலாளர் தினம் அல்ல. விஸ்வகர்மா ஜெயந்திதான் தொழிலாளர் தினம் என்கிறது BMS



உலகிலுள்ள தொழிலாளர்கள் அனைவரும் உலகத் தொழிலாளர் நாளாக மே முதல் நாளை ஏற்றுக் கொண்டு கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் பிஎம்எஸ் சங்கம் மட்டும் மே தினம் தொழிலாளர் தினம் அல்ல. விஸ்வகர்மா ஜெயந்திதான் தொழிலாளர் தினம் என்கிறது. இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

மே தினத்தை ஏற்றுக் கொண்டிருப்பவர்கள் வைக்கும் முழக்கம் “உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்” என்பதாகும். தொழிலாளர்கள் ஒன்று பட்டால்தான் அவர்களுக்கான உரிமைகளைப் பெற முடியும். ஆதிக்க சக்திகளின் எதேச்சாதிகாரத்தை முறியடித்து பாட்டாளி சமுதாயத்தை அமைக்க முடியும் என்பது இதன் பொருள். ஆனால் பிஎம்எஸ் என்ன சொல்கிறது தெரியுமா?

“தொழிலாளர்களே, உலகை ஒன்று படுத்துங்கள்” என்று சொல்கிறது. (ஆதாரம் : பிஎம்எஸ் சங்க மடல் அக்டோபர் 2001)
இதனுடைய நோக்கம் என்ன? தொழிலாளர்கள் ஒன்று பட்டுவிடக் கூடாது. அப்படி ஒன்றுபட்டு விட்டால் முதலாளிகளுக்கும் ஆதிக்கசக்திகளுக்கும் அது மிகப் பெரிய தொல்லையாகிவிடும். அதனால் தொழிலாளர்களை ஒன்று சேர விடாமல் செய்தால்தான் தங்கள் சுரண்டலை தாராளமாகச் செய்ய முடியும் என்பதுதான் அதன் நோக்கம்.

பிஎம்எஸ் சும் சங் பரிவாரும் அமைக்க விரும்பும் சமுதாயம் இந்து சமுதாயம் ஆகும். அந்த இந்து சமுதாயம் எப்படி இருக்கிறது?

பல்வேறு ஜாதிகளாகப் பிரிந்து கிடக்கிறது. ஒவ்வொரு தொழிலைச் செய்பவனும் ஒவ்வொரு ஜாதி;. அந்தத் தொழிலாளர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.

உதாரணத்திற்கு செருப்புத் தைக்கும் தொழிலாளி உயர் ஜாதிக்காரருக்;குத்தான் செருப்புத் தைத்துத் தர வேண்டுமே தவிர தனது காலிலே அணிந்து கொண்டு வீதிகளிலே நடமாடக் கூடாது. வெயிலில் வெந்து சாக வேண்டும். கல்லிலும் முள்ளிலும் காட்டிலும் மேட்டிலும் அவன் நடக்க அவதிப்பட வேண்டும்.

அதுபோல ஒரு விவசாயி நன்றாக மாட்டை வளர்த்து பாலையும்ää நெய்யையும் தயிரையும் உயிர் ஜாதியினருக்குக் கொடுத்து விட்டு தான் அய்ந்துக்கும் பத்துக்கும் மற்றவர் கையை எதிர்பார்த்துக் கிடக்க வேண்டும்.

ஒரு தொழிலாளியும் இன்னொரு தொழிலாளியும் ஒன்று சேர்ந்து விடக் கூடாது. கொள்வினை கொடுப்பினை வைத்துக் கொள்ளக் கூடாது. ஒருவர் வீட்டில் ஒருவர் சாப்பிடக் கூடாது. என்று தொழிலாளர் சமுதாயத்தைப் பிரித்து வைத்தது இந்து மதம்.

உதாரணமாக தீண்டத்தகாவர்களே ஒருவர் வீட்டில் ஒருவர் உண்ண மாட்டார். பெண் கொடுக்க மாட்டார். பெண் எடுக்க மாட்டார். ஒரு சலவைத் தொழிலாளியும் நாவிதரும் ஒன்று சேரக்கூடாது. ஒரு தச்சரும் குயவரும் ஒன்று சேரக்கூடாது.

இப்படி எல்லா சாதியினரையும் பிரித்து வைத்து அவர்கள் உழைப்பையெல்லாம் சுரண்டி உயர்ஜாதியினர் உல்லாச வாழ்க்கை வாழ வேண்டும். இவர்கள் ஒன்று சேர்ந்து விட்டால் அந்த உல்லாச வாழ்வுக்கு கேடு வந்துவிடும் என்பதால்தான் தொழிலாளர்கள் ஒன்று சேரக் கூடாது என்று பிஎம்எஸ் சொல்கிறது.

நாங்கள் ஏன் கீழ் ஜாதியாக இருக்க வேண்டும்? என்று கேட்டால் நீங்கள் முன் ஜென்மத்தில் செய்த பாவம், உங்கள் தலையெழுத்து, விதி என்றெல்லாம் காரணம் காட்டுவர். நீங்கள் மட்டும் எந்த உழைப்புமின்றி எங்கள் உழைப்பிலே உல்லாச வாழ்வு வாழ்கிறீர்களே! என்றால் அது எங்கள் முன்னோர் செய்த புண்ணியம் என்பார்கள்.

தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து விட்டால் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள். பாவம், புண்ணியம், தலைவிதி, என்ற இந்த ஏமாற்று வேலை எடுபடாது. தங்கள் உல்லாச வாழ்வு ஒரு நொடியில் பறிபோய்விடும் என்பதால்தான் தொழிலாளர்கள் ஒன்றுபடக் கூடாது என்கிற தத்துவத்தை ஆர்எஸ்எஸ் கொண்டிருக்கிறது.

அது உயர் ஜாதியினருக்கான அமைப்பு. தொழிலாளர் மத்தியில் அந்த சிந்தனையை அடிமை மனப்பான்மையை வளர்க்கத்தான் பிஎம்எஸ்ஸை ஆர்எஸ்எஸ் துவக்கியது.

அதனால்தான் ஆர்எஸ்எஸ்ஸால் இயக்கப்படும் பிஎம்எஸ் உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்ற முழக்கத்தை முன்வைக்கும் மே தினத்தைத் தொழிலாளர் தினமாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

எனவே தொழிலாளர்களே! தொழிலாளர்களுக்கு நண்பன் யார்? எதிரி யார்? என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்! மே தினத்தை சிறப்பாகக் கொண்டாடுங்கள்!
அனைவருக்கும் புரட்சிகரமான மே தின வாழ்த்துக்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக