வியாழன், 10 நவம்பர், 2016

திறமையானவர்களைத் தேர்ந்தெடுக்கும் இடத்தில் திறமையற்றவர்கள்



நிரந்தரமாக ஆள் எடுப்பதாக முதலில் கூறி ஆறுமாதம் தினக்கூலி ஆறுமாதம் தொகுப்பூதியம் என்று அறிவித்துவிட்டு பிறகு இரண்டரை ஆண்டுகள் தற்காலிகம் என்று ஆணை வழங்கி பணி நியமனத்தையே கேலிக்கூத்தாக்கியது பெல் நிர்வாகம். அதே நேரத்தில் மேற்பார்வையாளர், பொறியாளர் ஆகியோரை நிரந்தர ஊழியராக எடுத்து தொழிலாளர்களை வஞ்சித்தது. அதில் இடஒதுக்கீட்டை சரியாகக் கடைப்பிடிக்கவில்லை.

அது இரண்டாவது பேட்ஜ் நியமனத்தின்போதுதான் தெரிய வந்தது.
முதலில் அதிக மதிப்பெண் பெறுபவர்களை திறமையின் அடிப்படையில் திறந்த போட்டியில் தேர்வு செய்துவிட்டு அதற்குப்பிறகுதான் இட ஒதுக்கீட்டின்படி இதரபிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதமும்தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவிகிதமும் பணி நியமனம் நடைபெற வேண்டும்.

இதுதான் சட்டம். ஆனால் பெல் நிர்வாகத்திலுள்ள மெத்தப்படித்த அதிகாரிகள் தாங்கள்தான் சட்டத்தை எழுதியவர்கள்போல நினைத்துக்கொண்டு திறந்த போட்டி(Open Comptition) என்பதை மற்ற ஜாதியினர்Other Community) என்று திரிபுவாதம் செய்து சட்டத்தையும் தொழிலாளர்களையும் தொழிற்சங்கங்களையும் ஏமாற்றினர். 77 சதவிகித மதிப்பெண் பெற்ற தாழ்த்தப்பட்டவர் தேர்வு செய்யப்படவில்லை. 66 சதவிகிதம் பெற்ற இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் தேர்வாகவில்லை.

ஆனால் 53 மதிப்பெண் பெற்ற உயர்ஜாதிக்காரர் தேர்வு ஆனார். இதுதான் தகுதி உள்ளவர்களைத் தேர்வு செய்யும் இலட்சணமா என்று கேட்டு தொழிற்சங்கங்கள் நீதிமன்றம் சென்றதால்; இரண்டாவது பேட்ஜ் பணிநியமனம் எல்லோரும் தேர்வு செய்யப்பட்ட பிறகு அது நீதிமன்றத் தடை பெறப்பட்டு நிறுத்தப்பட்டு மீண்டும் ஒருமுறை தேர்வு நடத்தப்பட்டது. இதன் காரணமாக இதர பிற்படுத்தப்பட்டோர் 55 பேரும் தாழ்த்தப்பட்டவர்கள் 11 பேரும் பொதுப்போட்டியில் தேர்வு செய்யப்பட்டார்கள். இந்த 66 இடங்களையும் எதையோ பிடுங்கி யாருக்கோ தானம் வழங்கிதுபோல அப்படியே தூக்கி முன்னேறிய ஜாதிக்காரர்களுக்கு தானம் வழங்கியது மனிதவள நிர்வாகம்.

இப்பொழுது எட்டாவது பேட்ஜ் பணிநியமனத்தில் என்ன கோளாறு என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, மருத்துவ சோதனை எல்லாம் முடிந்து பணிநியமன ஆணையும் வழங்கப்பட்ட பிறகு தேர்வு நிறுத்தப்பட்டுள்ளது என்பது கேலிக்கூத்தானது. வினாத்தாள் வெளியாகிவிட்டது என்று செய்தி ஒருபக்கம். விடைகள் கணிணி மயமானதில் கோளாறு என்று செய்தி இன்னொரு புறம். இப்படி பல்வேறு வதந்திகள் நிலவுகிறது.


இப்படி கோளாறுமேல் கோளாறு செய்பவர்கள்தான் திறமையான நிர்வாகிகளா? இவர்கள்தான் மெத்தப்படித்தவர்களா? இப்படி தவறுக்குமேல் தவறு செய்யக்கூடிய அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் அந்தத் துறையைவிட்டு உடனடியாக வேறு துறைக்கு மாற்றப்பட வேண்டும். ஏதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

வேதனையிலும் ஆறுதல் என்னவெனில் தனக்குக் கீழுள்ள அதிகாரிகள் தவறு செய்திருந்தாலும் அதனை மூடி மறைக்காமல் தவறுகள் திருத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் விளைவுகளைப்பற்றிக் கவலைப்படாமல் உடனடியாக இத்தேர்வினை நிறுத்தி அடுத்தகட்ட நடவடிக்கையைத் துரிதப்படுத்தியுள்ள பொதுமேலாளர் (மனிதவளம்) அவர்களையும் நிர்வாக இயக்குனரையும் பாராட்டுகிறோம்.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக