புதன், 30 நவம்பர், 2016

பெரியார் பிறந்த பூமியில் மதவாத சக்திகள் தலைதூக்குவதும்ஜாதியம் சண்டித்தனம் செய்வதும் மிகவும் ஆபத்தானது.


     
        நடந்து முடிந்த பணியாளர் வைப்பு நிதி மற்றும் உணவகக் குழுத் தேர்தல் முடிவுகள் நமக்கெல்லாம் வேதனையும் வேடிக்கையும் அளிப்பதாக இருந்தாலும் நிர்வாகம் எதிர் பார்த்தபடி முடிந்துள்ளது. பங்குபெறும் சங்கங்களின் ஒற்றுமை இன்மை சங்கங்களுக்குள்ளேயே குழு மோதல்கள் சொந்த சங்கத்துக் காரனையே எதிரியாகக் கருதும் மனப்பாங்கு இவையெல்லாம் மற்ற சங்கங்களின் தோல்விக்கு காரணமாக அமைந்து.

அகில இந்தியத் தேர்தலில் எப்படி காங்கிரசின் இயலாமை பிஜேபி யின் வெற்றிக்குக் காரணமாக இருந்ததோ  அதுபோலத்தான் இங்கேயும் அவர்களே எதிர்பாராமல் வெற்றிக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். மோடி மோடி வளர்ச்சி வளர்ச்சி என்று கோஷம் போட்டு படாடோபமாக வந்து ஓராண்டு ஆனபின்னும் எந்த வளர்ச்சியும் நாட்டில் ஏற்படவில்லை. மாறாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அபார வளர்ச்சி. அதே போன்ற நிலைதான் இங்கேயும் ஏற்படப் போகிறது என்பதில் எள்ளளவும் அய்யம் இல்லை.

       நிர்வாகம் எப்படியாவது அவர்களை ஜெயிக்க வைத்தே தீர வேண்டும் என்பதிலே குறியாக இருந்தது. இருக்காதா பின்னே? வேலை மட்டும் செய் பலனை எதிர்பாராதே! என்று விவேகானந்தர் புத்தகத்தை வழங்கியதே பிஎம்எஸ்எஸின் ஏற்பாடுதானே! தொழிலாளி மட்டும் பலனை எதிர் பாராமல் வேலை செய்ய வேண்டும். அதிகாரிகள் எல்லாப் பலன்களையும் அனுபவித்துக் கொள்ள வேண்டும். இதுதான் அதன் கருத்து. அந்தக் கொள்கையை அமுல்படுத்த நிர்வாகத்துக்கு பெருந்துணையாக பிஎம்எஸ் இருக்கும் என்பதால்தான் கடந்த மூன்று தேர்தல்களில் மண்ணைக் கவ்விய பிஎம்எஸ் சுக்கு அலுவலகத்தைத் திறந்து விட்டது. அதோடு இ - மெயிலில் பிரச்சாரம் செய்ய அனுமதித்தது. வடநாட்டுக் காரன்களையெல்லாம் பிஎம்எஸ்சுக்கு ஓட்டுப்போட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது நிர்வாகம்.

      அடுத்து நமது தொழிலாளர்களை ஜாதி சங்கங்கள் தவறான திசைக்கு இழுத்துச் செல்கின்றன என்பதும் வேதனையானது. இங்கே ஒவ்வொரு ஜாதிக் காரர்களும் நாங்கள்தான் ஆண்ட பரம்பரைää ஆளப்போகும் பரம்பரை என்றெல்லாம் ஜாதி வெறியை தூண்டி விட்டு ஆதாயம் தேடுகின்றன. அவர்களுக்கு இந்த மதவாத சக்திகள் பெருந்துணையாக இருக்கும் என்பதால் ஜாதிச் சங்கங்கள் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்தன.

      மூவேந்தர்களும் நாங்கதான், சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் எல்லாம் எங்க சொந்தம்தான் என்று பெருமை பேசித் திரிகின்றீர்களே! இந்த மூவேந்தர்களும், சேர சோழ பாண்டிய பல்லவர்களும் இந்த நாட்டை ஆண்டும் உழைக்கும் மக்களுக்கு என்ன பயன்?

ஆயிரம் வருட மன்னர்கள் ஆட்சியை பின்னோக்கிப் பார்த்தால் எந்த மன்னனாவது தமிழன் படிக்க கல்விச் சாலைகளை நிறுவினான் என்ற வரலாறு உண்டா? இப்பொழுது ஆர்எஸ்எஸ், பிஜேபி, பிஎம்எஸ் கும்பல் இராசேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டு முடி சூட்டுவிழாவைக் கொண்டாடி வருகிறார்களே!

அந்த இராசேந்திரன் என்ன செய்தான் தெரியுமா?

ஆயிரக் கணக்கான கோயில்களைக் கட்டி வைத்து அதற்கு இலட்சக் கணக்கான வேலி நிலங்களை மானியமாக அளித்து பார்ப்பனர்களை அர்ச்சகராக்கி அவர்கள் உண்டு கொழுக்க ஏற்பாடு செய்தவன்தானே இராசேந்திர சோழன்? அத்தோடு எண்ணாயிரம் என்ற இடத்தில் சமஸ்கிருத வேதபாடசாலை அமைத்து ஆயிரக்கணக்கான வேலி நிலங்களை மான்யமாக அளித்து பார்ப்பனர் மட்டும் படிக்க வசதி செய்து கொடுத்தவன்தானே அந்த இராசேந்திர சோழன்?

      இப்படி அனுபவித்த பார்ப்பான் நம் மக்களை சூத்திரன் என்றான். தேவடியாள் மகன் என்று சாஸ்திரத்தில் எழுதி வைத்தான். சூத்திரன் படிக்கக் கூடாது.படித்தால் நாக்கை அறு என்றான். அதன் காரணமாகத்தானே நம் மக்கள் படிப்பறிவை இழந்தனர். இந்த ஆண்ட பரம்பரையைச் சேர்ந்த யாராவது ஒருவர் நூறு ஆண்டுக்கு முன்னால் படிப்பறிவு பெற்றதாக வரலாறு உண்டா? கையெழுத்து என்றால் கட்டை வண்டி மையைத் தேடித்தானே ஓட வேண்டும். இதையெல்லாம் மாற்றிக் காட்டியவர்தானே தந்தை பெரியார்?

      அந்தப் பெரியார் பிறந்த பூமியில் மதவாத சக்திகள் தலைதூக்குவதும்ஜாதியம் சண்டித்தனம் செய்வதும் மிகவும் ஆபத்தானது. மீண்டும் பழைய நிலையைக் கொண்டு வரவே இவர்கள் முயற்சி செய்வார்கள். இந்த வரலாறு தெரியாத இளைஞர்களிடம் மதவாதமும் ஜாதிய வாதமும் திணிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. பெற்ற உரிமைகளைப் பேணிக் காக்க பிற்படுத்தப்பட்ட – தாழ்ப்பட்ட மக்களே! ஒன்று சேருங்கள். ஜாதி மத சக்திகளை விரட்டி அடியுங்கள்!      
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக