ஞாயிறு, 20 நவம்பர், 2016

அம்பேத்கரிஸ்ட் என்றால் ஆர்.எஸ்.எஸாம்!

அம்பேத்கரிஸ்ட் என்றால் ஆர்.எஸ்.எஸாம்!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இன்று பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள். அவர்தம் பிறந்த நாள் விழா உலக அளவில் கொண்டாடப்படுகிறது. உலக அறிஞர்களுள் ஒருவர் அம்பேத்கர் என்று புகழாரம் சூட்டினார் தந்தை பெரியார்.

அண்ணல் அம்பேத்கர் தவிர்க்க முடியாத பெருஞ் சக்தியாக ஒளி வீசுகிறார் என்ற நிலையில், இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பிஜேபியும், சங்பரிவார்களும், பார்ப்பனீயத்துக்கே உரிய நயவஞ்சகத்தோடு அண்ணல் அம்பேத்கரைப் புகழ் பாடும் ஒரு வேலையில் ஈடுபட ஆரம்பித்துள்ளன.

அம்பேத்கர் உருவம் பொறிக்கப்பட்ட ரூபாய் நாணயங்களை வெளியிடுகிறது. அம்பேத்கர் ஜெயந்தியைக் கொண்டாடுகிறது.
எந்த அளவுக்கு அந்தக் கூட்டம் சென்றுள்ளது தெரியுமா? இவ்வார ஆர்.எஸ்.எஸ். ஏடான ‘விஜயபாரத’த்தில்  அட்டைப் படமே அண்ணல் அம்பேத்கர் தான். அதோடு நின்றாலும் பரவாயில்லை. அட்டைப் படத்திலும் பொறிக்கப்பட்ட எழுத்துக்களைப் படிக்கும் எவரும் அதிர்ச்சி அடையவே செய்வர். அதே நேரத்தில் ஆரியத்தின் மனோபாவத்தையும், கடந்த கால வரலாறுகளையும் அறிந்தவர்கள் இது ஆரியத்திற்கே உரிய அரவணைத்து அழிக்கும் நயவஞ்சகம் என்பதை அறிந்து கொள்ள முடியும் -
என்ன வாசகம் இடம் பெற்றிருக்கிறது? அம்பேத்கரிஸ்ட் என்றால் ஆர்.எஸ்..ஸே! என்று வெளியிட்டுள்ளது என்றால் இதைவிடக் கடைந்தெடுத்த தேசிய பித்தலாட்டம் ஒன்று இருக்க முடியுமா?

இந்து ராஜ்ஜியத்தை அமைக்கப் போகிறோம் என்று சொல்லுகின்ற ஓர் அமைப்பின் வார ஏட்டில் ‘நான் இந்துவாகப் பிறந்தேன் - ஆனால் இந்துவாக சாக மாட்டேன்!’ என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், பல லட்ச மக்களோடு இந்து மதத்திற்கே முழு முழுக்குப் போட்டு விட்டு, பவுத்தத்தைத் தழுவிய அண்ணல் அம்பேத்கர் படத்தை வெளியிட்டு, அவரை ஆர்.எஸ்.எஸ். என்று அடையாளம் காட்ட முயலுவதன் மூலம் தனக்குத் தானே தனது அறிவு நாணயமற்ற தன்மையை வெளிப்படுத்திக் கொண்டு விட்டதா இல்லையா?
வாஜ்பேயி பிரதமராக இருந்த காலத்தில் மத்திய அமைச்சராக இருந்தவர் அருண்ஷோரி. அம்பேத்கர்மீது சேற்றை வாரி இறைக்கும் ஒரு வேலையில் இறங்கினார். சாதாரணமாக அல்ல - “Worshisping False Gods” என்ற ஒரு நூலையே எழுதி அம்பேத்கர் மீது அவதூறு சகதிகளைப் பொழிந்து தள்ளினார் (அந்த நூலுக்கு மறுப்புரை வழங்கும் வகையில் திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை தனி நூலாகவே வெளி வந்துள்ளது - ஆகஸ்டு 1997)

பசு மாமிசம் சாப்பிடக் கூடாது என்று கூறி பசுவதைத் தடை சட்டம் கொண்டு வந்துள்ளதே பிஜேபி - அந்தப் பசு மாமிசம் குறித்து டாக்டர் அம்பேத்கர் எழுதிக் குவித்தது கொஞ்சமா நஞ்சமா?

ஆபஸ்தம்ப தர்ம சூத்திரத்தில் (14.15.29) “பசுவும் காளையும் புனிதமானவை ஆகையால் அவற்றின் இறைச்சியை உண்ண வேண்டும்“ என்று இருப்பதை அம்பலப்படுத்தியுள்ளார் அம்பேத்கர். பசு புனிதமாக இருப்பதால் தான் அதை உண்ண வேண்டும் என்கிறது இந்துமதம் தான். இதனை இன்றைய இந்துத்துவாவாதிகள்  தலைகீழாக அல்லவா குடை சாய்த்துள்ளனர்.

டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தொகுப்பு நூலில் “இந்துக்கள் என்றுமே மாட்டிறைச்சி உண்டதில்லையா?” என்ற தலைப்பில் விரிவாக எழுதியுள்ளாரே.

“பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி உண்பதைக் கை விட்டது ஏன்?” என்ற தலைப்பில் பார்ப்பனர்கள்  மாட்டிறைச்சி உண்பதை விடுத்து பசுவை வழிபடத் தொடங்கியது ஒரு தந்திர உபாயமே” என்றும் ஆழமாக எழுதியுள்ளார் (டாக்டர் அம்பேத்கர் - ஆங்கில நூல் தொகுப்பு 7 - பக்கம் 344-347).

சமஸ்கிருதத்தை ஆதரித்தவர் அம்பேத்கர் என்றெல்லாம் சங்பரிவார் அவர்களுக்கே உரித்தான முறையில் கயிறு திரித்து வருகின்றனர்.

அம்பேத்கர் எங்கே அப்படி சொன்னார்? அதற்கு ஆதாரம் என்ன? என்று கேட்டால் அவர்களிடம் பதில் கிடையாது.

‘தீண்டாதார் யார்?’ எனும் நூலில் அம்பேத்கர் கூறியுள்ள கருத்தென்ன?

“காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தமிழ்தான் அந்தக் காலத்தில் பேசப்பட்டது. அப்போது வாழ்ந்தவர்கள் நாகர்கள். அவர்கள்தான் திராவிடர்கள். அன்று மதம் என்ற ஒரு கருத்தே தெளிவாக வரையறுக்கப்படாத நிலையில் இருந்தது. ஆனால் ஆரியர்கள் வந்த பிறகு அவர்கள் சமஸ்கிருதத்தில், வேத, உபநிடதங்கள் எழுதி மதத்தை வளர்த்தார்கள். சமஸ்கிருத ஆதிக்கத்தால் தமிழ் அதன் எல்லையை சுருக்கிக் கொண்டு தென்னிந்தியாவில் மட்டும் பேசப்படும் மொழியாயிற்று” என்று “தீண்டத்தகாதோர் யார்?” எனும் நூலில் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்.
சமஸ்கிருத்தின் ஆதிக்கத்தை எடுத்துச் சொல்லியுள்ளாரே தவிர, சமஸ்கிருதத்துக்காக அவர் ஆதரவு தெரிவித்தார் என்பதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது.

தாழ்த்தப்பட்டவரான அம்பேத்கர் அரசியல் சட்டத்தை எழுதியதால்தான் அதில் 540 குறைபாடுகள் உள்ளன என்கிறார் பூரி சங்கராச்சாரியார் சுவாமி நிரந்தன்தேவ் (‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ 23.6.1988).

இந்தத் தன்மை உள்ளவர்கள் தந்தை பெரியார் அவர்களைத் தூற்றியும், அண்ணல் அம்பேத்கர் அவர்களைப் போற்றியும் பாடுவது  பார்ப்பனர்களுக்கே உரிய, இந்துத்துவாவுக்கே உரித்தான பிரித்தாளும் நயவஞ்சக சூழ்ச்சியே.

தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் பார்ப்பனர்கள்பற்றி அழுத்தமாகக் கூறிச் சென்றுள்ளதில் சமரசம் செய்து கொள்ளாமல், அவர்களின் கொள்கை வழி உறுதியாக நடந்து, இந்துத்துவாவையும், அதன் போர்வையில் ஒளிந்திருக்கும் பார்ப்பன சக்திகளையும் வீழ்த்திட அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாளில் உறுதியேற்போம்!

viduthalai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக