ஞாயிறு, 13 நவம்பர், 2016

கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும், சர்வதயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது?

~~மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது, கண்ணில் படக்கூடாது, தெருவில் நடக்கக்கூடாது, கோயிலுக்குள் போகக்கூடாது, குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கிறவை போன்ற கொள்கை தாண்டவமாடும் ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ, சமுத்திரம் பொங்கி மூழ்கச் செய்யாமலோ, பூமிப்பிளவில் அமிழச்செய்யாமலோ, சண்டமாருதத்தால் துகளாக்காமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகும்கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும், சர்வதயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது? என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

 இம்மாதிரி கொடுமக்கள் சமூகம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையோடும், சாந்தத்தோடும், அஹிம்சா தர்மத்தோடும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? இம்மாதிரியான மக்கள் இன்னும் ஒரு நாட்டில் இருந்துகொண்டு உயிர் வாழ்வதைவிட அவர்கள் இம்முயற்சியில் உயிர் துறப்பதை உண்மையிலேயே தப்பு என்று யாராவது நினைக்கிறீர்களா?| என்பதும் எனக்கு விளங்கவில்லை.

இம்மாதிரி மனித சமுதாயத்தை கொடுமைப்படுத்தி அடக்கி வைத்துக் கொண்டிருக்கிற நாடு சுயராஜ்யம் என்றோ, அரசியல் சுதந்திரம் என்றோ, பூரணவிடுதலை என்றோ வாயினால் உச்சரிக்கவாவது யோக்கியதை உடையதாகுமா? என்று கேட்கிறேன். சிலர் சுயராஜ்யம் வந்தால் இவை ஒழிந்துபோகும் என்று சமாதானம் சொல்லக்கூடும். அவர்களை நான் கேட்கிறேன். சுயராஜ்யம் மட்டுமல்ல தர்மராஜ்யமும் அவதார ராஜ்யமும் ராமராஜ்யமும் சத்தியராஜ்யமும் சத்திய சந்தன ராஜ்யமுமாகிய அரிச்சந்திர ராஜ்யமும் மற்றும் கடவுளே அரசாண்டதாகச் சொல்லும் அரசாட்சிகள் உள்ள காலத்தில்தானே இவைகள் உண்டாக்கப்பட்டதாகவும் இவற்றை சரிவரப் பரிபாலித்து வந்ததாகவும் இவை மகாக்கிரமமாக நடைபெற்று வந்ததாகவும் சொல்லப்படுகின்றன. அந்த ராஜ்யங்கள் வருமானால் இக்கொடுமைகள் குறையுமா? அதிகரிக்குமா? என்று கேட்கிறேன்.

என்று தந்தை பெரியார் அவர்கள் பேசி 02-12-1928 லேயே குடியரசு இதழில் வெளிவந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக