திங்கள், 14 நவம்பர், 2016

ஜாதிச் சங்கங்கள் தேவைதானா?



இரயிலும் தொழிற்சாலையும் வந்தால் இந்தியாவில் ஜாதிகள் ஒழிந்துபோகும் என்றார் கார்ல் மார்க்ஸ். படிப்பும் வேலைவாய்ப்பும் கிடைத்தால் ஜாதி ஒழிந்துபோகும் என்றனர் அண்ணல் அம்பேத்கரும் தந்தை பெரியாரும்.

ஏனெனில் ஒருவருக்கொருவர் பார்க்கக் கூடாது. தொடக்கூடாது. நெருங்கக் கூடாது. ஒருவர் வீட்டில் ஒருவர் உண்ணக்கூடாது என்பதுதான் நமது நாட்டில் ஜாதி தர்மமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன.

 இரயிலிலும் பேருந்திலும் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பயணம் செய்தனர். தொழிற்சாலைகளில் எல்லோரும் ஒன்றாகப் பணி புரிந்தனர். கல்வி பயில அனைவரும் சமமாக பெஞ்சில் அமர்ந்தனர். அலுவலகத்தில் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பில் அமர்ந்தபோது ஒரே குடியிருப்பில் ஒன்றாகக் குடியிருந்தனர். ஒருவர் வீட்டுத் திருமணத்தில் மற்றவர் கலந்துகொண்டனர். அனைவர் வீட்டு நிகழ்ச்சிகளிலும் அனைவரும் கலந்துகொண்டு ஒன்றாக உணவு உண்டனர். உணவு விடுதிகளில் ஒருவர் உண்ட தட்டில் மற்றவர் உண்டனர். இவையெல்லாம் ஜாதிக்கான கட்டுமானங்கள். இவை தகர்ந்துபோனது என்னவோ உண்மைதான்.

ஆனாலும் ஜாதிய உணர்வு குறைந்துவிட்டதா? அல்லது மறைந்துவிட்டதா? என்றால் கேள்விக்குறிதான்.
இவற்றையெல்லாம் பாதுகாப்பது எது? ஜாதி சங்கங்கள்தான். நமது நிறுவனத்தில் ஒரு தொழிலாளி பணியில் சேருகிறார் என்ற உடன் அந்த இளைஞனுடைய ஜாதியைச் சேர்ந்தவர்கள் உடனே அவரிடம் சென்று நமது ஜாதிச் சங்கத்தில் உறுப்பினராகச் சேருங்கள் என்கிறார்கள். நமது ஜாதியில் பெண் இருக்கிறது திருமணம் செய்துகொள்ளுங்கள் என்கிறார்கள்.

நமது ஜாதிக்காரர் அந்த சங்கத்தில் தலைவராக இருக்கிறார். பொதுச்செயலாளராக இருக்கிறார். அந்த சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து அவரைத் தேர்ந்தெடுக்க ஓட்டுப்போடுங்கள் என்;கிறார்கள். எந்த சங்கமாக இருந்தாலும் அந்த சங்கம் சார்ந்துள்ள கட்சியின் கொள்கை அல்லது தலைமை பிடிக்கிறதோ இல்லையோ அங்கே நமது ஜாதிக்காரன் பொறுப்பில் இருக்கிறானா? அதற்காக அந்த சங்கத்தில் சேருங்கள் என்கிறார்கள். எந்தெந்த சங்கத்திலெல்லாம் தனது ஜாதிக்காரன் தலைமைப் பொறுப்பில் இருக்கிறானோ அந்த சங்கத்தில் எல்லாம் உறுப்பினராகச் சேருங்கள் என்கிறார்கள்.

ஒரே ஆள் எத்தனை சங்கத்தில் வேண்டுமானாலும் சேரலாம் என்ற நிலையே இதனால்தான் உருவாகிறது. எல்லா சங்கத்திலும் நமது ஜாதிக்காரனே தலைமைப் பதவிகளில் அமர வேண்டும் என்ற வெறி ஊட்டப்படுகிறது.

நமக்குப் பிடிக்காத ஜாதிக்காரன் ஒரு பதவிக்குப் போட்டியிட்டால் அவன் நல்லவனா? கெட்டவனா? என்று பார்க்க வேண்டியதில்லை. அவனைத் தோற்கடிக்க எதுவேண்டுமானாலும் செய்யலாம். யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைக்கலாம் என்ற சித்தாந்தம் பரவி வருகிறது.

இது மிகவும் ஆபத்தான போக்கு.

இதனால் ஒழுக்கக் கேடே உருவாகும். என்னுடைய ஜாதிக்காரன். அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவனையே ஆதரிப்பேன் என்பதெல்லாம் ஊழலையும் ஒழுக்கக் கேட்டையுமே வளர்த்தெடுக்கும்.

இதைத் தவிர வேறு எதையாவது ஜாதிச் சங்கங்கள் செய்கின்றனவா? இப்படிப்பட்ட ஜாதிச் சங்கங்கள் தேவைதானா?

நமது சமுதாயம் ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகளாய் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாமல்ää தேங்கிய குட்டைபோல நாற்றமடைந்து கிடந்ததற்குக் காரணமே இந்த ஜாதிதான். இன்று ஜாதித் தொழில்கள் மறைந்துபோய் யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிலையும் செய்யலாம் என்ற நிலை உருவான பிறகும் இந்த நிலை நீடிப்பது வெட்கக் கேடானது.

தனக்கு மேல் எத்தனை ஜாதி வேண்டுமானாலும் இருக்கலாம். தனக்குக் கீழே எத்தனை ஜாதிகள் இருக்கின்றன என்பதை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொள்பவன் சுயமரியாதை அற்றவன் என்றுதான் பொருள். சுயமரியாதை உள்ள எவனும் தான் யாருக்கும் அடிமையில்லை. தனக்கு அடிமையும் யாரும் இல்லை என்று நினைப்பான்.

சுயமரியாதை உணர்வுகளை ஊட்டி  ஜாதிய உணர்வுகளை ஒழித்துக்கட்ட வேண்டியது உண்மையான பொதுநலனை விரும்புவோரது கடமையாகும். ஜாதியையும் மதத்தையும் ஒழித்துக்கட்ட சரியான வழிகளைச் சொன்னவர்கள் தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் ஆவார்கள். எனவேää அவர்களது கொள்கையைத் தாங்கி நடைபோடும் திராவிடர் தொழிலாளர் கழகத்தில் அனைவரும் சேர்ந்து ஜாதிவெறிக்கு சாவு மணி அடிக்க@ மதவெறிக்கு மரண அடி கொடுக்க உழைத்திடுவோம் வாரீர்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக