ஞாயிறு, 13 நவம்பர், 2016

ரவிக்குமார் போன்றவர்கள் சிவகாமி போன்றவர்கள் பார்ப்பனர்கள் என்ன சொல்கிறார்களோ அதனையே வழிமொழிந்து பேசுகிறார்கள்.


1917ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் வருடாந்திர மாநாட்டில்  பின்வரும் தீர்மானம் இயற்றப்பட்டது.

“தாழ்த்தப்பட்ட மக்கள் மிது தொன்றுதொட்டு இருந்துவரும் பழக்கத்தால் சுமத்தப்பட்டுள்ள இழிவுகள் மிகவும் வெறுப்புக்குரியவை. அடக்கி ஒடுக்கும் தன்மையிலானவை. தாழ்த்தப்பட்ட வகுப்பினரைப் பெரும் துன்பத்துக்கும் ஆளாக்குபவை. இந்த இழிவுகள் அனைத்தையும் அகற்றுவது இன்றியமையாதது. நீதியானது. நேர்மையானது என்பதை இந்த மாநாடு இந்திய மக்களிடம் வலியுறுத்திச் சொல்லிக்கொள்கிறது.”
இத்தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியதுதானே! தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அக்கறையுடன் போடப்பட்ட தீர்மானம்தானே! ஆனால் இதனை அண்ணல் அம்பேத்கர் ஒரு விசித்திர நிகழ்ச்சி என்று வர்ணிக்கிறார். ஏன் அவ்வாறு கூறுகிறார்.

இத்தீர்மானம் இயற்றப்பட்டது 1917ல். ஆனால் காங்கிரஸ் கட்சி துவக்கப்பட்டதோ 1885ல். இருபத்திரண்டு ஆண்டுகள் கழித்து இத்தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டிய அவசியம் என்ன? ஏன் இத்தனை ஆண்டுகள் இத்தகைய தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றவில்லை? எனக் கேள்வியெழுப்பி அதற்கான விடையையும் தருகிறார் அண்ணல் அம்பேத்கர்.
காங்கிரஸ் கட்சி மாநாடுகளில் மாநாடு முடிந்த அடுத்த நாள் சமூக சீர்திருத்த மாநாடு நடைபெறுவது வழக்கம். சுயராச்சியம் எனது பிறப்புரிமை என்று முழங்கிய திலகர் அந்த மாநாட்டைக் கடுமையாக எதிர்த்தார்.

அந்த எதிர்ப்பையும் மீறி சமூக சீர்திருத்த மாநாடு நடந்தால் மாநாட்டுப் பந்தலைத் தீவைத்துக் கொளுத்திவிடுவோம் என்று திலகரது ஆட்கள் மிரட்டியதால் காங்கிரஸ் கட்சி தீண்டாமை ஒழிப்பில் ஆர்வம் காட்டவில்லை. அதன் காரணமாகவே காங்கிரஸ் ஆரம்பித்து 22 ஆண்டுகள் ஆன நிலையிலும் தீண்டாமை ஒழிப்புக்கான தீர்மானத்தை ஒரு ஓப்புக்காகக் கூட இயற்றவில்லை என்கிறார் அம்பேத்கர்.

தீண்டாமை ஒழிப்பை ஒரு தீர்மானமாகக் கூட ஏற்றுக் கொள்ளாத தலைவர்தான் திலகர். காங்கிரஸ் மாநாட்டுப் பந்தலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை திலகர் அனுமதிக்க மறுத்ததால் தாழ்த்தப்பட்டோர் காங்கிரசின் கொடும்பாவியை கொளுத்திப் போராட்டம் நடத்தினர்.

அடுத்து சட்டமன்றத்துக்கு தாழ்த்தப்பட்டவர்களையும் அனுமதிக்கலாம் என பிரிட்டிஷ் அரசு சட்டம் கொண்டு வந்தபொழுது அதனைக் கடுமையாக எதிர்த்தவர் திலகரும் வல்லபாய் பட்டேலும்.

எண்ணெய்க் கடைக்காரரும் புகையிலைக் கடைக்காரரும் வண்ணார்களும் மற்றவர்களும் - பார்ப்பனரல்லாதாரையும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் இப்படித்தான் அவர் வர்ணித்தார்.- சட்;டமன்றத்துக்குச் செல்ல ஆசைப்படுவது ஏன்? என்று தனக்குப் புரியவில்லை என்றார்.
அவரது கருத்துப்படி இவர்களின் வேலை சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதே தவிர சட்டங்களை இயற்றும் அதிகாரத்துக்கு ஆசைப்படுவது அன்று.

1942ல் இரண்டாம் உலகப் போர் நடந்தபோது அனைத்து இந்தியர்களின் ஒத்துழைப்பையும்  பெற வேண்டும் என்பதற்காக அன்றைய வைஷ்ராய் லின்லித்தோ பிரபு அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த 52 முக்கிய பிரமுகர்களை அழைத்தார். இதில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலைவர்களும் அழைக்கப்பட்டார்கள். இப்படிக் கடையர் கூட்டத்தை வைசியராய் அழைத்து விட்டார் என்பதையே வல்லபாய் பட்டேல் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இது நடந்து முடிந்து சிறிது காலத்திற்குள் ஆமதாபாத்தில் உரையாற்றிய வல்லபாய் பட்டேல் சொன்னார்
~வைசிராய் இந்து மகாசபைத் தலைவர்களைக் கூப்பிட்டனுப்பினார். முஸ்லிம் லீக் தலைவர்களையும் கூப்பிட்டனுப்பினார். காஞ்சிகளையும்(எண்ணெய்க்காரர்கள்) மோர்ச்சிகளையும் (சக்கிலியர்களையும்) மற்றவர்களையும் கூப்பிட்டனுப்பினார்|

வல்லபாய் பட்டேல் குசும்பாகவும் குத்தலாகவும் காஞ்சிகளையும் மோர்ச்சிகளையும் குறிப்பிட்டார் என்றாலும் ஆளும் வகுப்பினரும் காங்கிரசாரும் இந்நாட்டின் அடிமை வகுப்பை பொதுவாகவே இகழ்ந்து வெறுப்பதையே அவரது பேச்சு காட்டுகிறது.
(ஆதாரம் : காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாத மக்களுக்குச் செய்தது என்ன?)

சட்டமன்றத்துக்குத் தாழ்த்தப்பட்டவர்கள் செல்வதையே விரும்பாதவர்கள் திலகரும் பட்டேலும். அத்துடன் திலகர் சுதந்திரமடைந்த இந்தியாவில் மனுதர்மம்தான் சட்டமாக ஆக்கப்படும் என்றவர் திலகர்.
அந்த மனுதர்மம் என்ன சொல்கிறது?

பிராமண குலத்தில் பிறந்து கர்மானுஷ்டானம் இல்லாத பிராமணனாக இருந்தாலும் அரசன் செய்ய வேண்டிய நீதி விசாரணையைச் செய்யலாம்.
மனு அத் - 8ää சுலோ 20
எந்த தேசத்தில் அரசன் செய்ய வேண்டிய தரும விசாரணையைச் சூத்திரன் செய்கிறானோ அந்தத் தேசம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சேற்றில் அகப்பட்ட பசுவைப் போல துன்பப் படுகிறது.
மனு அத் - 8ää சுலோ 21
அதாவது எந்தவிதமான அறிவும் ஒழுக்கமும் இல்லாத பிராமணன்கூட நீதி விசாரணை செய்யலாம். ஒரு அறிவுள்ள ஒழுக்கமான சூத்திரன் நீதிபதியாக இருக்கக் கூடாது என்பதுதான் மனுதர்மம்.

ஒரு கீழ்ஜாதிக்காரன் தாழ்த்தப்பட்டவன் சட்டமன்றத்துக்குச் செல்லவே ஆசைப்படக்கூடாது என்பது பாலகங்காதர திலகரின் கொள்கை. காங்கிரஸ் மாநாட்டுப் பந்தலுக்குள்ளேயே தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்காதவர் திலகர். இவர்தான் சுதந்திரம் எனது பிறப்புரிமை என்றவர்.

அந்தத் திலகர் மனுதர்மத்தை இந்த நாட்டுக்குச் சட்டமாக ஆக்க வேண்டும் என்றவர். அந்த மனுதர்மத்தில் ஒரு சூத்திரன் நீதிபதியாக ஆகவே கூடாது என்பது அழுத்தந்திருத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது.

அப்படி இருக்கையில் ஒரு தாழ்த்தப்பட்டவர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மனுதர்மத்திற்கு மாற்றாக ஒரு புதிய சட்டத்தையே எழுதியிருக்கிறார் இந்த நாட்டினுடைய சட்ட அமைச்சராகவே ஆகியிருக்கிறார் என்றால் மனுதர்மத்தின் மீது மிகுந்த பிடிப்புக் கொண்ட ஜாதியின்மீது தீவிர வெறி கொண்ட தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில் மிகவும் தீவிரமான திலகர் உயிருடன் இருந்திருந்தால் இதனை அனுமதித்திருப்பாரா?

மாநாட்டுப் பந்தலுக்குள்ளே ஒரு தீண்டத்தகாதவனை அனுமதித்தால் அந்த மாநாட்டுப் பந்தலையே கொளுத்தி விடுவதாக எச்சரித்த திலகர்பெருமான் தீண்டத்தகாத வகுப்பில் பிறந்த அண்ணல் அம்பேத்கர் சட்டம் எழுதியதைப் பொறுத்துக்கொண்டிருப்பாரா?

1890களில் மராட்டியத்தில் பிளேக் நோய் பரவியபோது அதனை ஒழிக்க எலிகளை அழிக்க உத்தரவிட்ட டபிள்யூ.சி.ரேண்ட் என்ற வெள்ளைக்கார அதிகாரி அதனைக் கண்காணிக்க அக்கிரஹாரத்தில் நுழைந்தான் என்பதால் அதனை எதிர்த்து தனது பத்திரிகையான கேசரி யில் வெறியூட்டும் வகையில் எழுதினார். அதனைப் படித்து அதனால் வெறியூட்டப்பட்ட சபேர்கர் சகோதரர்கள் அந்த வெள்ளைக்கார அதிகாரியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள். அந்த அளவிற்கு திலகரின் எழுத்துக்கள் வெறியூட்டுவதாக இருந்தது. அதன் காரணமாக திலகருக்கும் சிறைத்தண்டனை கிடைத்தது.

அப்படியிருக்க அண்ணல் அம்பேத்கர் சட்டம் எழுதியபோது திலகர் உயிருடன் இருந்திருந்தால் அதனை திலகர் அனுமதித்திருப்பாரா? அவர் எந்த அளவிற்குப் பேசியிருப்பார்? எந்த அளவிற்கு எழுதியிருப்பார்?

அவரது எழுத்துக்களைப் படித்தவன் பேச்சுக்களைக் கேட்டவன் அண்ணல் அம்பேத்கரை உயிருடன் விட்டு வைத்திருப்பானா? வீரசவர்க்கரின் பேச்சுக்களைக் கேட்ட அவரது எழுத்துக்களைப்படித்த நாதுராம் விநாயக கோட்ஷே காந்தியடிகளைக் கொல்லவேண்டும் என்ற வெறி வந்ததுபோல் திலகரின் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் கேட்ட படித்த ஒரு தொண்டன் காந்தியைக் கோட்ஷே கொன்றதுபோல் அம்பேத்கரையும் தீர்த்துக்கட்டும் அளவுக்கு வெறிபிடித்தவனாகி இருக்க மாட்டானா?

இப்படிப்பட்ட திலகர்தான் ஆர்எஸ்எஸ் இந்துமுன்னணி, பாஜக கும்பலுக்கு வழிகாட்டி. தாழ்த்தப்பட்டவர்கள்மீது மிகுந்த வெறுப்புக் கொண்ட வல்லபபாய் பட்டேலுக்குத்தான் பாஜக அரசாங்கம் உலகிலேயே மிக உயரமான சிலை வைக்கிறது
.
வட்டமேசை மாநாட்டில் அண்ணல் அம்பேத்கர் பெற்ற தனித்தொகுதி முறையை எதிர்த்து வாதாட காந்திக்கு ஆதரவாக இலண்டன் சென்றவர்தான் மதன்மோகன் மாளவியா. பார்ப்பான் கடல் தாண்டிப் போகக் கூடாது என்ற சம்பிரதாயத்தையே மீறி தாழ்த்தப்பட்டவன் உரிமை பெறுவதை ஒடுக்க வேண்டும் என்ற வெறியுடன் சென்றவர்தான் மாளவியா. அவருக்குத்தான் பாஜக அரசு பாரதரத்னா விருது கொடுத்துச் சிறப்பிக்கிறது.

அண்ணல் அம்பேத்கர் வட்டமேசை மாநாட்டில் பெற்ற தனித்தொகுதி முறையை முதலில் ஆதரித்த தாழ்த்தப்பட்ட இனத்தலைவர் எம்.சி.இராஜா. அவரது மனதை மாற்றி அம்பேத்கருக்கு எதிராகத் திருப்பினவர் நாகபுரியில் 1925ல் ஆர்எஸ்எஸ் சைத் துவக்கின அய்ந்து பேர்களில் ஒருவரான டாக்டர் மூஞ்சே!

இந்த ஆர்எஸ்எஸ் பாஜக காரர்கள்தான் பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபடவில்லை என்று  சொல்லுகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களிடையே விசமத்தனத்தைத் தூவி பெரியார் மீது அவதூறு பரப்புகிறார்கள். இதனை அறிந்தும் அறியாத ரவிக்குமார் போன்றவர்கள் சிவகாமி போன்றவர்கள் பார்ப்பனர்கள் என்ன சொல்கிறார்களோ அதனையே வழிமொழிந்து பேசுகிறார்கள்.
இந்த சமுதாயம் திருந்துவது எப்போது? அடிமை வாழ்விலிருந்து மீள்வது எப்போது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக