செவ்வாய், 29 நவம்பர், 2016

இத்தனை ஆண்டுகள் இல்லாத கரிசனம் இந்த சுதந்திரநாளின்மீது ஏன் வந்தது?



சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் ஆனது? இவர்கள் சங்கம் துவக்கி எத்தனை ஆண்டுகள் போனது? இத்தனை ஆண்டுகள் இல்லாத கரிசனம் இந்த சுதந்திரநாளின்மீது ஏன் வந்தது? எப்படி வந்தது? சுதந்திரத்துக்கு இவர்கள் ஆற்றிய பணி என்ன? சுதந்திரநாளில் இவர்களின் குருநாதர்கள் என்ன செய்தார்கள்? இவையெல்லாம் கேள்விக்குறிகள்.

இவர்களின் குருநாதர் திலகர் சுதந்திரத்தைப்பற்றி என்ன கருத்துக் கொண்டிருந்தார்? சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று சொன்னவர் ~இந்த நாட்டுக்குச் சுதந்திரம் வந்தால் மனுதர்மம்தான் சட்டமாக இருக்க வேண்டும் என்றவர். ஜனநாயகத்தின்மீது நம்பிக்கையற்றவர். கற்றறிந்த பிராமணர்களின் ஆலோசனையோடு மன்னர்கள் ஆட்சி நடத்த வேண்டும் என்று சொன்னவர். செக்கு ஆட்டுபவனும் பீடாக்கடைக்காரனும்ää சலவைத் தொழிலாளியும் மற்றவர்களும் தேர்தலில் நின்று சடச்சபைக்குச் செல்ல வேண்டும் என்று ஏன் ஆசைப்படுகிறார்கள்? அவர்களெல்லாம் அவரவர் குலத்தொழிலைச் செய்ய வேண்டுமே தவிர நாட்டை ஆள ஆசைப்படக்கூடாது என்றவர்.

அவர் அரசியலில் நுழைந்ததே படுபிற்போக்குத்தனமான காரியத்திற்காகத்தான். மனுதர்மத்தின்படி ஒரு பெண்ணுக்கு எட்டு வயதுக்குள் திருமணம் செய்து கொடுத்து விடவேண்டும் என்ற இந்துமத ஆச்சாரத்தின்படி அப்பொழுது திருமணம் நடைபெற்று வந்தது. இதுவே காட்டுமிராண்டித்தனமான செயல். அப்படி எட்டு வயதில் திருமணம் செய்த பெண்ணை முப்பது வயது முரடன் உடலுறவு கொண்டான். அந்தக் கொடூரச்செயலால் அந்தப் பிஞ்சு இறந்துபோனது. இதைப்பார்த்த வெள்ளை அரசாங்கம் திருமணம் ஆனாலும் ஒரு பெண்ணுக்கு பத்து வயது ஆகுமுன் அப்பெண்ணுடன் கணவன் உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்தது. அந்தச் சட்டத்தை எதிர்த்து தீவிர அரசியலில் இறங்கிய படுபிற்போக்குவாதிதான் திலகர். அதற்குப் பிறகு காங்கிரசில் நுழைந்து காங்கிரஸ் பந்தலுக்குள்ளேயே தீண்டத்தகாதவர்களை அனுமதிக்கக்கூடாது என்றும் அப்படி மீறி அனுமதித்தால் பந்தலையே கொளுத்திவிடுவோம் என்று மிரட்டிய ஜாதி வெறியர்தான் திலகர்.

இந்த திலகரும் கோட்ஷேயும், சாவர்க்கரும், ஹெட்கேவரும் இன்னும் பல ஆர்எஸ்எஸ் தலைவர்களும் மராட்டிய சித்பவன் பார்ப்பனர்கள். இந்த சித்பவன் பார்ப்பனர்கள்தான் மராட்டிய வீரனான சிவாஜியை சூத்திரன் என்பதற்காகப் பட்டம் கட்டவிடாமல் செய்து அவனை சத்திரியனாக்குவதாகக் கூறி யாகங்களையும் வேள்விகளையும் செய்து தங்கமும், வைரமும், வைடூரியமும் தானமாகப்பெற்று சிவாஜியை திவால் ஆக்கினவர்கள். சிவாஜிக்குப் பிறகு மராட்டிய அரசியலைக் கைப்பற்றி அங்கே ஜாதிவெறியையும் தீண்டாமையையும் தாண்டவமாடச் செய்தவர்கள். இவர்கள் கேட்ட சுதந்திரம் என்பது வெள்ளைக்காரன் தங்களிடம் நாட்டை ஒப்படைத்து மீண்டும் பார்ப்பன ராஜ்யத்தை உருவாக்குவதே.

அப்படிச் செய்யாமல் காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை ஒப்படைத்ததால் ஆத்திரமடைந்து சுதந்திர நாளையே துக்கநாளாகக் கொண்டாடினார்கள். அன்றைய தினம் ஜெர்மனிய ஹிட்லரின் ஸ்வஸ்திக் கொடியை ஏற்றியவர்கள் ஆர்எஸ்எஸ்காரர்கள். கோட்ஷே தனது பத்திரிகையில் தலையங்கப் பகுதியை கறுப்பு மையால் இட்டு நிரப்பி தனது எதிர்ப்பைக்காட்டினான்.

அந்த திலகரின் வழிவந்த பிஎம்எஸ் இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் இப்பொழது திடீரென்று சுதந்திர நாளைக் கொண்டாடுவதாக அறிவிப்பதே ஒரு நாடகம். இவர்கள் கூறும் தியாகிகள் பட்டியலில் காந்தியைக் காணோமே ஏன்? அவர் சுதந்திரத்துக்குப் பாடுபடவில்லையா? காந்தியைக் கொன்ற கூட்டம் அவர் படத்தை எப்படிப் பயன்படுத்தும்?

இவர்கள் ஜனநாயகத்தை நம்பாதவர்கள். அம்பேத்கர் எழுதிய இன்றைய அரசியல் சட்டத்தை ஏற்காதவர்கள். இந்த நாட்டை இந்து நாடாக மாற்ற வேண்டும் என்று துடிப்பவர்கள். அந்த இந்து ராஜ்யத்தில் பிற்படுத்தப்பட்டவனுக்கும் தாழ்த்தப்பட்டவனுக்கும் கல்வி தரக்கூடாது, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்ற கொள்கை கொண்டவர்கள். முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும் இந்த நாட்டில் வாழ வேண்டுமானால் இராமனையும் கிருஷ்ணனையும் கடவுளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பவர்கள்.

இப்படிப்பட்டவர்களின் பசப்பு வார்த்தையை நம்பி மோசம் போகாதீர் என்று தொழிலாளர்களை பணிவுடன் வேண்டுகிறோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக