திங்கள், 14 நவம்பர், 2016

பெரியாரை ஆர்எஸ்எஸ் கூட்டம் பாராட்டினால்தான் அது ஆபத்தானது.



இராமன் ஒரு குடிகாரன் பொம்பளைப்பொறுக்கி என்பதை வால்மீகி இராமாயணத்தின் மூலம் நிரூபித்த அம்பேத்கரை இராமனுக்குக் கோயில் கட்டத்துடிக்கும் ஆர்எஸ்எஸ் கூட்டம் ஆதர்ஷ புருஷர் என்று சொல்வது எதற்காக?

ஒருவரை ஆதர்ஷ புருஷர் என்று சொன்னால் அவரது கொள்கைகள் எதையாவது ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆர்எஸ்எஸ் அம்பேத்கரின் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறதா? கீதை பைத்தியக்காரன் உளறல் என்று சொன்னாரே! அதனை ஏற்றுக் கொண்டதா ஆர்எஸ்எஸ்? மாறாக அந்தக் கீதைதான் இந்த நாட்டின் புனித நூல் என்கிறீர்கள்.

சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று சொன்ன திலகர் தாழ்த்தப்பட்;டவனை காங்கிரஸ் மாநாட்டுப் பந்தலுக்குள்ளேயே நுழைய விடக்கூடாது என்றவர். அப்படி நுழைந்தால் மாநாட்டுப் பந்தலையே கொளுத்தி விடுவேன் என்றவர். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் சட்டமன்றத்துக்கும்

நாடாளுமன்றத்துக்கும் செல்லக்கூடாது என்றார் திலகர். அதே கருத்தைக் கொண்டவர்தான் பட்டேல். அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியைத் துறக்கக் காரணமாக இருந்தவர் பாரதீய ஜனதாவின் முன்னோடியான சியாம் பிரசாத் முகர்ஜி. இவர்களை ஆதர்ஷ புருஷர்களாக ஏற்றுக்கொண்ட ஆர்எஸ்எஸ் அம்பேத்கரையும் ஆதர்ஷ புருஷராகச் சொல்வது ஏன்? தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றத்தானே என்று கேட்டால் ஆம் அல்லது இல்லை என்று சொல்ல வேண்டும். அல்லது அம்பேத்கருடைய கொள்கைகளை இன்ன இன்னவற்றை ஏற்றுக்கொண்டுவிட்டோம் அதனால் அவர் எங்களுக்கு ஆதர்ஷ புருஷர் என்று சொல்ல வேண்டும்.


அம்பேத்கர் மனுதர்மத்தை எரித்தவர். அதனை சட்டமாக ஆக்க வேண்டும் என்றவர் திலகர். அம்பேத்கரை ஆதர்ஷ புருஷராகக் கொண்டாடுவதாகச் சொல்லும் நீங்கள் இதில் எதனை ஏற்றுக் கொள்கிறீர்கள்? நீங்கள் அமைக்கப் போகும் இராமராஜ்யத்தில் மனுதர்மம் சட்டமாக இருக்குமா? அம்பேத்கர் எழுதிய சட்டம் இருக்குமா?

இதற்கெல்லாம் பதில் சொல்ல வக்கற்ற கூட்டம் பெரியாரை ஆதர்ஷ புருஷராக ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறது. அவரை ஆதர்ஷ புருஷர் என்று சொல்ல நீ யார்? பெரியாரை நீ பாராட்டினால்தான் அது ஆபத்தானது. பெரியாரைப்பற்றிச் சொல்லுகின்ற குற்றச்சாட்டு எவ்வளவு அபத்தமானது, அயோக்கியத்தனமானது என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் போதும் என்று கருதுகிறோம். அதாவது 19 வயதுப் பெரியார் 13 வயது நாகம்மையைத் திருமணம் செய்தது குழந்தைத் திருமணமாம். இதைவிட உலகமகா நகைச்சுவை வேறு இருக்க முடியுமா?

திருமண வயது பற்றி உன்னுடைய இந்துமதம் என்ன சொல்கிறது? அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரி ~இந்துமதம் எங்கே போகிறது?| என்ற நூலில் என்ன எழுதினார்?

“மனுதர்மம் பெண்களை எட்டு வயது முடிவதற்குள் அவளின் தகப்பன் அவளைத் திருமணம் செய்து கொடுத்து விட வேண்டும். அவ்வாறு செய்து கொடுக்கா விட்டால் அந்தப்பெண் வயசுக்கு வந்த பிறகு மாதவிடாயின்போது வெளியேறும் கழிவை தகப்பன் அருந்த வேண்டும்” என்று சாஸ்திரம் சொல்வதாக எழுதும் தாத்தாச்சாரி இதனை எழுதவே கை கூசுகிறது. சொல்லவே குமட்டுகிறது. நா தடுமாறுகிறது. இதை எழுதி முடித்தவுடன் இந்தப் பேனாவை உடைத்துப் போட வேண்டும் என்று தோன்றுகிறது என்று எழுதுகிறார். இதுதான் உன்னுடைய இந்துமதத்தில் பெண்களின் திருமண வயது.

இதன்படிதான் அன்றைக்கிருந்த அத்தனைத் தலைவர்களும் பாரதியார் காந்தி திலகர்; உட்பட அனைவருமே பெண்ணுக்கு எட்டு அல்லது ஒன்பது வயதிலேயே திருமணம் செய்திருக்கிறார்கள். இராமகிருஷ்ண பரமஹம்சர் 23 வயதில் 5 வயதுப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அதுகூடப் பரவாயில்லை. உங்கள் திலகர் முதன்முதலில் அரசியலில் குதித்தது எதற்காக தெரியுமா? எட்;டு வயதில் திருமணம் செய்த ஒருவன் அந்தப் பெண்ணுடன் எந்த வயதில் உடலுறவு கொள்ளலாம் என்று சட்டம் சொன்னது தெரியுமா? பத்து வயதில். அதனை வெள்ளைக்காரன் பனிரண்டு வயதாக உயர்த்தினான். அப்படி அந்த வயதை உயர்த்தியதை எதிர்த்துத்தான் திலகர் அரசியலுக்கே வந்தார்.

ஆடு மாடுகூட பருவமடையாத பெண் இனத்தைப் புனராது. ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் பத்து வயதுப் பெண்ணுடன் உடலுறவு கொள்ளலாம் என்று சொன்ன திலகரை வழிகாட்டியாகக் கொண்ட நீங்களா பெரியார் 13 வயது நாகம்மையை மணந்ததை குழந்தைத் திருமணம் என்பது?

எட்டு வயதுப் பெண் உங்களுக்குக் குமரி? 13 வயதுப் பெண் குழந்தையா? எட்டு வயதுக் குழந்தைக்கு என்ன தெரியும்? ஆனால் 13 வயது நாகம்மை தன்னை ஒரு கிழவனுக்கு மூன்றாந்தாரமாக மணமுடிக்க அவரது பெற்றோர் முயன்றபோது நான் ராமசாமியைத்தான் திருமணம் செய்வேன் என்று வாதாடி மணந்துகொண்ட பக்குவமான பெண்;.

 இதைத்; தெரியாமல் பேசுபவன் ஒன்று முட்டாளாக இருக்க வேண்டும். அல்லது தெரிந்து பேசுபவன் அயோக்கியனாக இருக்க வேண்டும். இதில் இந்த பிஜேபி எந்த ரகம் என்பதை தோழர்களே புரிந்துகொள்வீர்! மற்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் முப்பது ஆண்டுகளாகக் கேட்டவைதான். அதற்கெல்லாம் பதில் சொல்லி புத்தகமாகவும் வந்துள்ளது. மீண்டும் மீண்டும் தங்களிடம் உள்ள சரக்கு அவ்வளவுதான் என்பதுபோல் திரும்பத்திரும்பக் கேட்டுள்ளார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்வது நேரத்துக்குக் கேடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக